நாகராஜன் தவமிருந்த நாகை


நாகப்பட்டினம், ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள் திருக்கோயில்

ஸ்ரீமந் நாராயணன் சயனித்தால் படுக்கையாகவும், அமர்ந்தால் இருக்கையாகவும், நின்றால் குடையாகவும் தான் இருக்க வேண்டும் என வேண்டினான் ஆதிசேஷன். இதற்காக இத்தலத்தில் சார புஷ்கரிணி என்ற ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி ஆதிசேஷன் தவமிருந்தான். பெருமாளும் ஆதிசேஷனின் தவத்தில் மகிழ்ந்து, அவரை தனது படுக்கையாக, இருக்கையாக, குடையாக ஏற்றுக் கொள்வதாக அருள்புரிந்தார்.

மூலவர் நீலமேகப் பெருமாள் மற்றும் உற்சவர் ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள்

நாகங்களின் ராஜனாகிய ஆதிசேஷன் தவமிருந்த இத்தலம், அவன் பெயராலேயே நாகப்பட்டினம் என அழைக்கப்படுகிறது. கடற்கரை நகரமான நாகப்பட்டினத்தில் ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள், ஸ்ரீ செளந்தர்யநாயகி தாயாருடன் கோயில் கொண்டுள்ளார்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 18 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது.

சௌந்தரவல்லித் தாயாருடன் ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள்

விழா நாட்களில் காலையில் சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி வீதியுலா வருகிறார். இங்குள்ள செளந்தர்ய புஷ்கரணியில் தீர்த்தவாரி, புஷ்ப பல்லக்கில் நந்தவன பிரகாரப் புறப்பாடு, 9-ம் நாள் முதல் ஒரு வாரத்துக்கு கோயிலில் உள்ள தீர்த்தக் குளக்கரை மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம், 18-வது நாளில் தங்க ரதத்தில் பெருமாள் மற்றும் தாயார் பிரகாரப் புறப்பாடு ஆகியவை நடைபெறுகின்றன.

இக்கோயிலில் மூலவர் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உற்சவர்: சௌந்தரராஜப் பெருமாள், தாயார்: சௌந்தரவல்லி / கஜலட்சுமி.

பிரகாரத்தில் வைகுண்டநாதர், சௌந்தரவல்லித் தாயார், சீனிவாசப் பெருமாள், ஆண்டாள் நாச்சியார், ஸ்ரீராமபிரான், ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதிகளில் வீற்றிருக்கிறனர்.

நாகப்பட்டினம், ஸ்ரீ செளந்தரராஜ பெருமாள் கோயில் உள்பிரகாரம்

x