காக்கும் கார்த்திகைச் செல்வன் - 29


வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில். இது பிரபலமான முருகப் பெருமானின் திருத்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் முருகப் பெருமான் (மூலவர்) 7 அடி உயரம் கொண்டவராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள முருகப் பெருமான் தலங்களில் உள்ள சிலைகளில், இத்தல மூலவர் விக்கிரகமே உயரமானதாகும்.

அருணகிரிநாதர் இத்தல முருகப் பெருமான் மீது 7 திருப்புகழ் பாடல்கள் புனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டை நகர், கோட்டையாம் பட்டி, கோடை எனும் பட்டி, கோட்டை என்று பலவாறு வல்லக்கோட்டையைப் போற்றி புகழ்ந்துள்ளார். இருப்பினும் வல்லக்கோட்டை என்ற பெயரே தற்போது நிலைத்துள்ளது.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் இலஞ்சி தேசத்தில் உள்ள சங்கொண்டபுரம் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். ஒருநாள் நாரத முனிவர், பகீரதனைக் காணச் சென்றபோது, மன்னன் அவரை சரிவர உபசரிக்கவில்லை. கோபமடைந்த முனிவர், சங்கொண்டபுரம் நகருக்கு அருகில் இருந்த காட்டுக்குச் சென்றார். அப்போது அவர் எதிரே, பல நாடுகளை வென்று, வெற்றிக் களிப்பில் கோரன் என்ற அரக்கன் வந்து கொண்டிருந்தான்.

பகீரதனை வீழ்த்த கோரனே தகுதியான நபர் என்று நினைத்த நாரத முனிவர், தானே அவனிடம் வலியச் சென்று, “நீ பல நாடுகளுடன் போரிட்டு வெற்றி பெற்றிருந்தாலும், இலஞ்சி நாட்டை வென்றால் மட்டுமே உனது திக் விஜயம் நிறைவுபெறும்” என்று கூறிவிட்டுச் சென்றார். (திக் விஜயம் என்பது நான்கு திசைகளுக்கும் படைகளுடன் சென்று மன்னர்களை வெல்வதாகும்)

நாரத முனிவர் கூறியதை மனதில் நினைத்தபடி தனது இருப்பிடம் சென்றான் கோரன். உடனே தனது படைகளை திரட்டிக் கொண்டு இலஞ்சி நாட்டின் மீது போர் தொடுத்து, பகீரதனை வீழ்த்தினான். எதிர்பாராத தாக்குதலையும் எதிர்பாராத தோல்வியையும் நினைத்து வருந்தினான் பகீரதன். நாடு, நகரம் என்று அனைத்தையும் இழந்ததால் காட்டுக்குச் சென்றான். அங்கு இருந்த நாரத முனிவரை சந்தித்து, நடந்த சம்பவங்களைக் கூறி, தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். நாரத முனிவரும் அதற்கான விமோசனத்தை துர்வாச முனிவர்தான் தர முடியும் என்கிறார். இதைத் தொடர்ந்து பல நாட்கள் காட்டிலேயே தங்கி, மிகுந்த இன்னல்களுக்கு ஆளானான் பகீரதன். பின்னர் ஒருநாள் துர்வாச முனிவரை சந்தித்து, தனது நிலையை அவரிடம் விவரித்து, நாட்டை மீட்பதற்கான வழிகளைக் கேட்டான்.

வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து, அந்தக் காட்டில் உள்ள பாதிரி மரத்தடியில் உள்ள முருகப் பெருமானை வழிபட்டால், ஒருவரது வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும் என்று துர்வாச முனிவர் யோசனை தெரிவித்தார். துர்வாச முனிவரின் ஆலோசனைப்படி முருகப் பெருமானை வழிபட்டு, வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்றான் பகீரதன். சில காலம் கழித்து அவனே, முருகப் பெருமானுக்கு ஒரு கோயில் கட்டி, வள்ளி தெய்வானையுடன் மூலவரை பிரதிஷ்டை செய்தான். அந்தக் கோயிலே வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகும்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கோயிலில் உள்ள சிற்பங்கள் பல்லவ நாட்டு கலைவண்ணத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. வள்ளி, தெய்வானை விக்கிரகங்கள் குறிப்பிடத்தக்கன. பல்லவர்கள் அமைத்த கோயில்கள் அனைத்திலுமே பாறைகளைக் குடைந்து, அதில் இருந்த பாறைகள் மீதே சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். அவற்றை செதுக்குவதற்கு கற்கள், ஜல்லிகள், பிற உலோகங்கள் என்று எதுவுமே பயன்படுத்தி இருக்கமாட்டார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், இந்தக் குகையை தமது ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்டு, பல அரிய தகவல்களை சேகரித்துள்ளனர்.

பழுதடைந்த இக்கோயில், கிருபானந்த வாரியார் சுவாமிகள், மயிலை ரத்னகிரி முருகன் அடிமை சுவாமிகள், சுவாமி ராமதாஸ் ஆகியோரின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டது. 7 அடி உயரம் கொண்ட மூலவரை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் குவிவது வழக்கம். இக்கோயிலில் விநாயகர், அம்பாள், உற்சவர் முருகன் சந்நிதிகள் காணப்படுகின்றன. ஸ்ரீ காமாட்சி, ஆஞ்சநேயரைத் தழுவியபடி உள்ள ராமபிரான் சிற்பங்கள் அர்த்த மண்டபத் தூண்களில் காணப்படுகின்றன.

வல்லன் வதம்

முன்பொரு காலத்தில் வல்லன் என்ற அசுரன் இவ்வூரை தன் வசப்படுத்திக் கொண்டு, தன் கோட்டையாக நினைத்து, மக்களுக்கு பல இன்னல்கள் அளித்து வந்தான். தேவர்களுக்கும் தீராத தொல்லைகள் கொடுத்து வந்தான். நாளுக்கு நாள் அவனது கொடுமைகள் எல்லை மீறியதால், செய்வதறியாது தவித்த தேவர்கள் இதுதொடர்பாக முருகப் பெருமானிடம் முறையிட்டனர். அவரும் “வல்லன் அழியும் நேரம் வந்துவிட்டது அதனால் பயப்பட வேண்டாம்” என்று தேவர்களுக்கு அபயம் அளித்து வல்லனை வதம் செய்தார். உயிர் பிரியும் சமயத்தில், தனது பெயரால் இவ்வூர் அழைக்கப்பட வேண்டும் என்று, வல்லன் தனது விருப்பத்தை முருகப் பெருமானிடம் கூறினான். வல்லனின் விருப்பப்படியே முருகப் பெருமான், இவ்வூரை ‘வல்லன் கோட்டை’ ஆக்கினார். இதுவே காலப்போக்கில் ‘வல்லக்கோட்டை’ ஆனது.

வஜ்ர தீர்த்தம்

ஒரு சமயம் இந்திரன் முருகப் பெருமானை வணங்க விருப்பம் கொண்டு அதற்கான இடத்தைத் தேடினார். இதுதொடர்பாக தனது குரு பிரஹஸ்பதியிடம் ஆலோசனை கேட்டார். பிரஹஸ்பதியும், பூலோகம் சென்று அங்குள்ள வல்லக்கோட்டை என்ற தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானை தரிசித்து நலம் பெறுமாறு இந்திரனுக்கு அறிவுறுத்தினார்.

இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து, தனது வஜ்ராயுதத்தை ஊன்றி ஒரு தீர்த்தக் குளத்தை உண்டாக்கினான். அந்த நீரால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டான். அதனால் இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளம் ‘வஜ்ர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

திருப்புகழ் போற்றும் வல்லக்கோட்டை

முருகப் பெருமான் வீற்றிருக்கும் தலங்கள்தோறும் சென்று தரிசித்து, திருப்புகழ் பாடும் அருணகிரியார், திருப்போரூர் தலத்தில் உள்ள முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு, மறுநாள் காலை திருத்தணி செல்ல திட்டமிட்டார். அன்று இரவு திருப்போரூரிலேயே தங்கினார். அவரது கனவில் தோன்றிய கோட்டை நகர் முருகப் பெருமான், “வல்லக்கோட்டையை மறந்தது முறையல்ல” என்று தெரிவித்தார். கண்விழித்த அருணகிரி நாதர், திருத்தணி செல்லும் முன்பாக வல்லக்கோட்டை முருகப் பெருமானை தரிசித்து 7 பாடல்கள் பாடினார்.

திருப்புகழ் பாடல்:

‘ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து

ஆகமல மாகி நின்று - புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து

ஆளமுகனாகி நின்று - விளையாடி

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து

பூமிதனில் வேணு மென்று - பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நககெய் தாம லுன்றன்

பூவடிகள் சேர அன்பு - தருவாயே

சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற

தீரனரி நார ணன்றன் - மருகோனே

தேவர்முனி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று

தேடஅரி தான வன்றன் - முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற

கோமளிய நாதி தந்த – குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட

கோடைநகர் வாழ வந்த – பெருமாளே!’

விளக்கம்:

முதன்முதலாக நாம் இந்த உலகில் அவதரிக்கும்போது தாயின் உடலில் இருந்து பல அழுக்குகள் நிறைந்த உருவத்துடன் பிறக்கிறோம். உள்ளத்தில் பல ஆசைகளுடன் இருக்கிறோம். பெற்றோர் மற்றும் உறவினரின் அன்புடன் வளர்கிறோம். பருவ வயதை எட்டும்வரை விளையாடிக் களிக்கிறோம். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அலைந்து திரிகிறோம். மேலும், பொருள் ஈட்டும் பொருட்டு பல இடங்களுக்குச் சென்று உழைக்கிறோம். சுக போகங்களில் ஈடுபடுகிறோம். இப்படியான வாழ்க்கையின் நிறைவில் பாழான நரகத்தை அடையாமல் உனது மலர்ப் பாதங்களை அடைய உனது அன்பைத் தர வேண்டும்.

‘சீதா பிராட்டியைக் கவர்ந்து சென்ற ராவணனை வீழ்த்தி வெற்றி கண்ட தீரனான நாராயணனின் மருமகனே! தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரம்மதேவர் முதலானோர் தேடியும் காண்பதற்கு அரிதாக விளங்கும் சிவபெருமானின் குமாரனே! கயிலைநாதனுக்கு இடதுபக்கத்தில் வீற்றிருக்கும் தேவியாகவும், தொடக்கமே இல்லாதவளுமாகிய பார்வதி தேவியின் மைந்தனே! ஒன்றுகூடி வந்த சூரபத்மனின் மார்பை இருகூறாகப் பிளந்தவனே! கோடை நகரில் (வல்லக்கோட்டை) வாழ்ந்திருக்கும் பெருமானே’ என்று திருப்புகழில் வல்லக்கோட்டை முருகப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதத்திலும் பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்கள், தைப்பூசம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, சஷ்டி தினங்களில் முருகப் பெருமானுக்கு இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினங்களில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா காண்பார்.

இங்கு வரும் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். எண்ணற்ற திருமணங்களும் இங்கு நடைபெறுகின்றன. வஜ்ர தீர்த்தத்தில் நீராடி முருகப் பெருமானை வழிபட்டால் வினைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

x