மிருகண்டு மகரிஷியின் புதல்வர் மார்க்கண்டேய மகரிஷி. மகாலட்சுமி தாயார் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்றும், ஸ்ரீ மகாவிஷ்ணு தனக்கு மருமகனாக வேண்டும் என்றும் பிரார்த்தித்து, காவிரிக்கரையில் அமைந்துள்ள திருவிண்ணகரில் கடும் தவமிருந்தார். அதனையேற்று காவிரிக்கரையில் திருத்துளசி செடிகளுக்கு மத்தியில் பெண் குழந்தையாக ஸ்ரீ மகாலட்சுமி தாயார் அவதரித்தாள். மார்க்கண்டேயரும் அக்குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். அக்குழந்தையும் உரிய வயதை எட்டியது.
ஒரு பங்குனி மாதம் ஏகாதசியுடன் கூடிய திருவோண நன்னாளில், கிழப் பிராமண உருவம் கொண்டு அங்கு வந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, மார்க்கண்டேயரிடம் பெண் கேட்டார்.
வயதால் என் மகள் மிகவும் இளையவள். சமைக்கக் கூட தெரியாதவள். மறந்து போய் உணவில் உப்பு சேர்க்கத் தவறினால் கூட நீங்கள் சினந்து சபிக்கக்கூடும். இது ஒத்துவராது என்றார் முனிவர்.
உம் மகள் சமைக்கும் உப்பிலா பண்டமே எமக்கு உகப்பு. நான் இப்பெண்ணை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்று கூறி அந்த முதியவர் அமர்ந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த மார்க்கண்டேய மகரிஷி ஆபத்தில் உதவும் பரந்தாமனை வேண்டி நிஷ்டையிலமர்ந்தார். தமது தபோ வலத்தால் வந்திருப்பவர் திருமாலே என்று நினைத்து கண் திறக்கும் வேளையில் சங்கு சக்கரதாரியாக பெருமாள் காட்சியளிக்க, தண்டனிட்டு வணங்கிய மார்க்கண்டேய மகரிஷி, கன்னிகாதானம் செய்துவைத்து தமது மாப்பிள்ளையாக ஸ்ரீ மகாவிஷ்ணுவை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு.
‘உப்பில்லா பண்டத்தை உகந்து நாம் ஏற்போம்’ என்று பெருமாள் சொன்னதாலேயே இன்றும் திருவிண்ணகர் பெருமாளுக்கு உப்பிலா நிவேதனமே படையலாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனாலேயே இப்பெருமானுக்கு உப்பிலியப்பன் எனவும் திருநாமம் அமைந்தது.
கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருவிண்ணகர் உப்பிலியப்பன் சுவாமி சன்னதியில் மூலவராக வேங்கடாசலபதி வீற்றிருக்கிறார். என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து திருக்கோலங்களை இப்பெருமான் சுவாமி நம்மாழ்வாருக்கு காட்டியருளினார். பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நான்கு ஆழ்வார்கள் இப்பெருமாளைப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருப்பதி திருவேங்கடமுடையான் சன்னதியைப் போலவே இங்கும் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மார்பில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகே பூமாதேவி தாயாரும், மறுபுறம் மார்க்கண்டேயரும் மண்டியிட்டு வணங்கும் கோலத்தில் உள்ளனர்.
திருவேங்கடமுடையானுக்கு தமையனாக இவர் கருதப்படுவதால், திருப்பதிக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சைகளை இங்கு செலுத்தலாம். திருப்பதி பெருமாளைப் போலவே, திருவிண்ணகர் வேங்கடாலபதிக்கும் தனியாக சுப்ரபாதம் உண்டு.
இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுற்று, 25.6.2023 அன்று கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 29.6.2023 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.