ஸ்ரீ மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை ரூபம்) எடுத்த நாள் ஆனி மாதம் தேய்பிறை துவாதசி நாளாகும். கூர்ம அவதாரம் தோன்றிய இடம் திருப்பாற்கடல். வைணவத் திருப்பதிகள் 108 உள்ளன. இதில் 107-வது திவ்யதேசம் திருப்பாற்கடல் ஆகும். 108-வது திவ்யதேசம் பரமபதம் ஆகும். அதாவது பூலோகத்தில் 106 திவ்யதேசங்கள் உள்ளன. மற்ற இரு திவ்யதேசங்களும் விண்ணில் உள்ளன.
பர, வியூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை என ஐந்து நிலைகளில் பகவான் ஸ்ரீ மந் நாராயணன் சேவை சாதிக்கிறார்.
பர என்றால் பரமபதநாதன். பரமபதத்தில் அதாவது ஸ்ரீ வைகுந்தத்தில் நித்ய சூரிகளோடு, தனது தேவியரோடு வீற்றிருக்கும் கோலமே பர ஆகும்.
வியூகம் என்றால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் பகவான் சேவை சாதிக்கும் இடம் வியூகம் ஆகும்.
விபவ என்றால் யுகந்தோறும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் பூலோகத்தில் அவதாரம் மேற்கொள்வது ஆகும்.
அந்தர்யாமி என்றால், அனைத்து ஆத்மாக்களின் இதயத்திலும் குடிகொண்டு இருக்கும் ஸ்ரீ மந் நாராயணன், அந்த ஆத்மாக்களின் தோஷங்கள் ஒட்டாத வகையில் பரிபூரணமாக குடியிருக்கிறார். இது அந்தர்யாமி நிலை எனப்படும்.
அர்ச்சை என்றால் அனைத்து கோயில்களிலும், நமது வீடுகளிலும் சிலையாக, ஓவியமாக பகவான் எழுந்தருளி இருக்கும் நிலை ஆகும்.
இவை ஐந்து நிலைகளில் வியூகம் எனப்படும் திருப்பாற்கடலில் ஷீராப்தி நாதன் என்ற திருநாமத்துடன் பகவான் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். இந்த திருப்பாற்கடலே கூர்ம அவதாரத்தின் பிறப்பிடம் ஆகும்.