திருமங்கையாழ்வார் கட்டிய ஸ்ரீ ரங்கம் தசாவதாரக் கோயில்


ஸ்ரீ ரங்கம் தசாவதாரக் கோயில் - திருமங்கை ஆழ்வார்

ஸ்ரீரங்கத்தில் நான்காவது மதில் சுற்றுக்கு திருமங்கை மன்னன் சுற்று என்பது பெயர். இந்த மதில் சுவரைக் கட்டியர் சுவாமி திருமங்கை ஆழ்வார். இதற்காக அவர் ஸ்ரீரங்கத்திலேயே தங்கி இருந்தார். அப்போது இறைவனின் தசாவதாரக் காட்சிகளைக் காண வேண்டும் என விரும்பினார். திருமங்கை ஆழ்வாரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, பெருமாள் தான் ஏற்கெனவே எடுத்த ஒன்பது அவதாரங்கள் மட்டுமின்றி, இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரக் காட்சியையும் காட்டி அருளினார்.

பெருமாளின் 10 அவதார திருக்கோலங்கள்

இவ்வாறு பெருமாளின் 10 அவதார திருக்கோலங்களையும் கொண்ட கோயில் ஸ்ரீ ரங்கத்தில் அமைந்துள்ளது.

மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என நான்கு அவதாரங்களிலும் திருமால் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். வாமனரின் வலது கை தானம் வாங்குவது போலவுள்ளது. இடது கையில் குடையுடன் காட்சி தருகிறார். பரசுராமர் வலது கரத்தில் கோடரியுடனும், ராமபிரான் வில் அம்புடனும், பலராமர் கலப்பையுடனும் காட்சி தருகின்றனர். ஒரு கையை நாட்டிய பாவத்தில் வைத்தபடியும், மற்றொரு கையில் வெண்ணெயுடனும் கிருஷ்ணர் வீற்றிருக்கிறார்.

கல்கி பகவான் வலது கரத்தில் கத்தியும், இடது கரத்தில் கேடயமும் தாங்கி, குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். நான்கு கரங்களுடன் கூடிய விஸ்வக்சேனரை இங்குதான் தரிசிக்க முடியும்.

தினசரி அபிஷேகம் செய்ய வலம்புரி சங்கு தீர்த்தமே பயன்படுத்தப்படுகிறது.

திருமங்கை ஆழ்வார் (ஸ்ரீ ரங்கம் தசாவதாரக் கோயில்)

கார்த்திகை மாதம் 5 நாட்கள் திருமங்கை ஆழ்வாரின் அவதார உற்சவம் கொண்டாடப்படுகிறது. சித்திரை, ஆடி, ஐப்பசி மாதப் பிறப்புகள், தீபாவளி நாட்களில் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கார்த்திகை மாதம் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படுகிறது. அன்று லட்சுமி நாராயணர் திருச்சுற்றில் மட்டும் உலா வருவார். தை மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் உற்சவர் லட்சுமி நாராயணர் மற்றும் தாயார் சேவை சாதிக்க ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து மேலூர் செல்லும் சாலையில், ஒன்றரை கி.மீ. தூரத்தில் இக்கோவில் இருக்கிறது.

ஸ்ரீ ரங்கம் தசாவதாரக் கோயில் உள்பிரகாரம்

x