புதுச்சேரி: ஜப்பான் ஆன்மிக குழுவினர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து அன்னதானம் வழங்கினர்.
ஜப்பான் நாட்டிலிருந்து ஆன்மிக குழுவினர் ஆண்டுதோறும் மணக்குள விநாயகர் கோயிலுக்கு வருவது வழக்கம். அதே போன்று இன்று 25 பேர் கொண்ட ஜப்பான் நாட்டு ஆன்மிக குழுவினர் விநாயகர் கோயிலுக்கு வந்தனர். மணக்குள விநாயகருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கினர். பின்னர் கோயிலில் சாமி தரிசனம் முடித்த பின்பு, ஜப்பான் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு மாலை மரியாதை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டது.
இந்தியாவில் கோயில்களை தரிசிக்க வரும்போது மணக்குள விநாயகரை தரிசிக்க வந்தோம் என்றனர். பின்னர் விநாயகர் பக்தி பாடல்களை தாங்கள் எடுத்து வந்த நோட்டிலுள்ள குறிப்புகளை வைத்து பாடினர்.
நாளை மகா சங்கடஹர சதுர்த்தி: "உலக புகழ்பெற்ற அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் மகா சங்கட சதுர்த்தி விழா நடக்கிறது. நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி திதியானது வர உள்ளது. மற்ற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்யாதவர்கள் கூட 22ம் தேதி வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை தவற விடக்கூடாது. விநாயகர் சதுர்த்தி முன்பு வரக்கூடிய சங்கடகர சதுர்த்தி திதியை தான் மகா மகா சங்கடகர சதுர்த்தி என கூறுவார்கள். உலக புகழ்பெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோயில் சங்கடஹர சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.
மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கிறது. பின்பு பக்தர்களின் பார்வைக்காக மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. கோயிலில் வெளி பிரகாரத்தில் உற்சவர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூட்ட நெரிசலை தவிர்க்க மூலவருக்கு அர்ச்சனை செய்யாமல் உற்சவருக்கு மட்டும் வெளியே அர்ச்சனை செய்யப்படவுள்ளது. பக்தர்களுக்கு தொடர்ந்து இடைவிடாமல் அன்னதானம் வழங்கப் படவுள்ளது. நாளை மாலை கோவிலில் பரத நாட்டியம் கலை நிகழ்ச்சி நடக்கிறது.