பழநி: அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், பக்தர்களுக்கு வழங்குவதற்காக 53,000 பிரசாத பைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக.24, 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் சமயப் பெரியோர், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, மாநாட்டில் பங்கேற்க இணையதளம் மூலம் நடந்த முன்பதிவில் உள்நாட்டினர் 774 பேர், வெளி நாட்டினர் 187 பேர் என மொத்தம 961 பேர் பதிவு செய்துள்ளனர்.
சிறப்பு விருந்தினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்குவதற்காக திண்டுக்கல் மற்றும் பழநியில் உள்ள தனியார் விடுதிகள், தேவஸ்தான விடுதிகளில் 586 அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 நாட்களும் 3 வேளை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தடுக்க, ஒரே இடத்தில் தயார் செய்யும் உணவை 10 இடங்களில் வைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவின் தரத்தை உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிக்கவும், மாதிரிகளை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டுக்கு வரும் பங்கேற்பாளர்கள், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்கள், முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு 3,000 பிரசாதப் பைகள், பக்தர்களுக்கு 50,000 பிரசாதப் பைகள் என மொத்தம் 53,000 பிரசாதப் பைகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
முருகனின் படத்துடன் கூடிய பிரசாதப் பையில் சிறிய அளவிலான முருகன் படம், விபூதி, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், சிறிய துண்டு, கந்தசஷ்டி கவசம் புத்தகம், லட்டு, முறுக்கு உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. இவற்றை பிரசாதப் பைகளில் போட்டு தயார் செய்யும் பணியில் கோயில் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டுள்ளனர்.