சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் காவி ரங்கநாதர்


காவி ரங்காபுரா - காவி ரங்கநாத சுவாமி கோவில்

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் காவி ரங்காபுரா என்ற சிறிய கிராமத்தில் சிறிய மலை மீது கூர்ம (ஆமை) அவதாரத்தில் எம்பெருமான் வீற்றிருக்கிறார். இவருக்கு காவி ரங்கநாத சுவாமி என்பது திருப்பெயர். ஸ்ரீ உத்பவ லட்சுமி என்பது தாயார் திருநாமம்.

காவி என்றால் கன்னடத்தில் குகை என்று அர்த்தம். காவி ரங்காபுரா கிராமத்தில் உள்ள சிறிய மலை மீது குகைக்கோவிலாக, இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு அடுக்குகளாக அமைந்துள்ள இக்கோவிலின் வாசலில் வெண்கலத்தாலான மிகப்பெரிய கருடன் சிலை நம்மை வரவேற்கிறது. ஐந்து அடுக்குகள் கொண்ட ராஜகோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றால், மண்டியிட்டு வணங்கும் இரண்டு யானை சிற்பங்கள் கவர்கின்றன.

காவி ரங்காபுரா - காவி ரங்கநாத சுவாமி கோவில்

காவி ரங்காபுரா - காவி ரங்கநாத சுவாமி கோவில்

திருப்பாற்கடலைக் கடையும் போது ஸ்ரீ மகாவிஷ்ணு மிகப்பெரிய ஆமையாக அவதாரம் எடுத்து மந்தார மலையைத் தாங்குவது போன்ற ஓவியம் இக்கோவில் வாயிலில் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ளது. குகைக் கோயிலின் கருவறைக்குள் கூர்ம அவதார திருக்கோலத்தில் காவி ரங்கநாதர் அருள்பாலிக்கிறார். வெள்ளியாலான திருக்கண்களும், சுவாமியின் திருக்கரங்களில் சங்கு, சக்கரங்களும் உள்ளன. இந்த விக்ரகம் சுயம்புவாக உருவானது என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீ உத்பவ லட்சுமி தாயார் சன்னதி தனியாக உள்ளது. பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளில் ஸ்ரீ அனந்தபத்மனாப சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

குகைக் கோயிலின் கருவறைக்குள் கூர்ம அவதார திருக்கோலத்தில் காவி ரங்கநாதர் (சுயம்பு மூர்த்தி)

மிக நெடுங்காலமாகவே மைசூருவில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் இக்கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் இங்கு குவிகின்றனர்.

x