ஆமை வடிவில் மூலவர் அருளும் கூர்ம அவதாரக் கோயில்!


நல்லவர்களைக் காக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோறும், யுகந்தோறும் ஸ்ரீ மகாவிஷ்ணு அவதரிக்கிறார். தர்மத்தை நிலைநாட்ட தானே நேரடியாக பூலோகத்தில் அவர் தசாவதாரங்களை எடுக்கிறார். அத்துடன் ஆழ்வார்களையும், ஆசார்யர்களையும், அடியார்களையும் பிறக்கச் செய்து அவர்கள் மூலமாகவும் தர்மத்தை நிலைநாட்டச் செய்கிறார்.

கூர்ம அவதாரம் (ஆமை) ஸ்ரீ மகாவிஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். கூர்ம அவதாரத்தில் பெருமாள் வீற்றிருக்கும் கோலத்தை ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பலமனேர் அருகில் உள்ள கூர்மை என்ற கிராமத்தில் தரிசிக்கலாம்.

கூர்மை கிராமம்- கூர்ம வரதராஜ பெருமாள்

கூர்மை கிராமத்தில் கூர்ம வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவரின் இடுப்புக் கீழ்ப்பகுதி ஆமை வடிவத்தில் உள்ளது. நான்கு கரங்களுடன் பெருமாள் வீற்றிருக்கிறார். பூதேவி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

கூர்மை கிராமம் அமைந்துள்ள ராயலசீமா பகுதி 16-ம் நூற்றாண்டில் அன்னியர்களின் ஆட்சியில் இருந்தது. அப்போது இந்து கோயில்களின் செல்வங்களை கொள்ளையடிப்பதும், கோயில்களை சேதப்படுத்துவதும் அதிகமாக நடைபெற்றது.

அக்காலத்தில் கூர்மை கிராமத்தில் வசித்தவர்கள் தங்கள் குலதெய்வமான கூர்ம வரதராஜ பெருமாள் கோயிலைக் காப்பதற்காக, கோயில் முழுவதையும் மண்ணைக் கொட்டி மூடினர். மிகப் பெரிய மண் மேடாக மாறியது கோயில். அப்போது, மூலவர் வரதராஜ பெருமாள் தனது காலடிச் சுவடை ஒரு கல்லில் பதித்துவிட்டு, அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

பிற்காலத்தில் கர்நாடகாவில் இருந்து வந்த பக்தர் ஒருவர் இந்த மண் மேட்டை விலக்கி, உள்ளிருந்த கோயிலை மீட்டார். அப்போது மூலவர் விக்ரகம் சேதமடைந்தது. தற்போது நாம் தரிசிக்கும் கூர்ம வரதராஜ பெருமாள் விக்ரகம், அதன்பிறகு வடிவமைக்கப்பட்டதாகும். சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள சித்தூரில் இருந்து பலமனேர் நெடுஞ்சாலையில் கூர்மம் கிராமம் அமைந்துள்ளது.

x