மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்திருக்கக் கூடிய ஒரு கிராமத்தின் வழியே நடை யாத்திரை சென்று கொண்டிருந்தார் மகா பெரியவா.
மகான் நித்தமும் பயன்படுத்தக் கூடிய பூஜைப் பொருட்கள், அவரது வஸ்திரங்கள், இன்னபிற தனிப்பட்ட உடைமைகளையும் தாங்கிய ஒரு கூண்டு வண்டி, அந்தச் சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்தது. நம்மூர் சைக்கிள் ரிக்க்ஷா போல் காணப்படும் இந்த வாகனத்தை ஸ்ரீ மடத்து அன்பர் ஒருவர் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி தள்ளிச் சென்று கொண்டிருந்தார்.
அந்த வண்டியின் பின்புறத்தைத் தன் இரு கைகளாலும் பிடித்தபடி கரடுமுரடான அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தார் மகான். சாலை சீராக இல்லாமல் கரடுமுரடாகக் காணப்பட்டது. ஆனால், எதையும் பொருட்படுத்தாமல் பெரியவா நடந்து கொண்டிருந்தார்.
அப்போது எவரும் எதிர்பாராத விதமாக மாடு ஒன்று தறிகெட்ட வேகத்தில் ஓடிவந்தது. யானைக்கு மதம் பிடித்தால் எப்படி இருக்குமோ, அதுபோல்இந்த மாடு முரட்டுத்தனத்துடன் திக்கு திசை தெரியாமல் ஓடிவந்து கொண்டிருந்தது. ஆக்ரோஷமாக மாடு ஓடிவருவதைப் பார்த்தவர்கள் பயத்தில் வீடுகளுக்குள் வேகமாகச் சென்று கதவைச் சாத்தினார்கள்.
மகா பெரியவாளுக்கு அருகே அந்த மாடு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த சிப்பந்திகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். முரண்டு பிடித்தவாறு ஓடிவரும் மாட்டைத் தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி உள்ளூர்க்காரர்கள் எவருக்கும் இல்லை என்பது சிப்பந்திகளுக்குப் புரிந்தது.
‘மகா பெரியவாளைக் காப்பாற்ற வேண்டுமே... மகானுக்கு எந்த அபசாரமும் ஏற்பட்டு விடக்கூடாதே’ என்று சிப்பந்திகள் கவலைப்பட்டனர்.
‘அது சர்வேஸ்வர அவதாரம். சகலத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற இறை சொரூபம்’ என்பது தெரிந்தாலும், அசட்டையாக இருக்கக் கூடிய வேளையா அது?!
மகா பெரியவாளை நோக்கி அந்த மாடு வேகமாக நெருங்கி வருகிறது.
‘‘டேய்ய்... வண்டில இருக்கிற ரெண்டு டின் ஜலத்தை வேகமா எடுத்து மாட்டுக்கு வை’’ என்று உரக்க உத்தரவிட்டார் மகா பெரியவா.
சட்டென்று அந்த உத்தரவை நிறைவேற்றினார்கள் அருகில் இருந்த சிப்பந்திகள். இரண்டு டின் தண்ணீரின் மேல் மூடி திறக்கப்பட்டு, மாடு வரும் திசை நோக்கிக் கீழே தரையில் வைக்கப்பட்டது. தண்ணீர் நிரம்பிய டின்களைப் பார்த்ததும், மூர்க்கத்துடன் வந்த மாட்டின் வேகம் குறைந்தது. நடமாடும் தெய்வத்தின் உத்தரவு அந்த மாட்டுக்கும் கேட்டிருக்கும் போலிருக்கிறது.
என்ன ஒரு ஆச்சரியம்...
அதுவரை ‘என்னை அடக்க யாருமே இல்லை... என் குறுக்கே வந்தால் குத்திக் கிழித்து விடுவேன்’ என்பதுபோல் வந்த மாடு,
கலியுக தெய்வத்தின் அருகே நெருங்கும் போது சாந்தமானது.
தண்ணீர் டின்கள் அருகே வந்ததும், அதற்குள் தலையை விட்டு ‘ஸ்வாஹா’ செய்தது. ஒரு டின் காலியானதும், அடுத்த டின்னில் இருந்த தண்ணீரையும் ‘தாக சாந்தி’க்குப் பயன்படுத்திக் கொண்டது!
இரண்டு டின்களில் இருந்த தண்ணீர் முழுக்க மாடு குடித்து முடித்தது. அந்த மாட்டை ஓட்டி வந்தவர் அப்போதுதான் மூச்சிரைக்க வந்து நின்றார். கூட்டத்தினரைப் பார்த்து வணங்கினார்.
நீர் அருந்திய பின் சாந்தமாகக் காணப்படும் மாட்டை மெள்ளத் தடவிக் கொடுத்தவர், அருகே மகா பெரியவாளைப் பார்த்தார். இரண்டு கைகளையும் கூப்பி அவரை வணங்கினார். தரையில் விழுந்து நமஸ்கரித்தார். பிறகு மகா பெரியவாளைப் பார்த்து, ‘‘மஹராஜ்... மன்னிக்கணும். இந்த ஊரிலும், இதைச் சுற்றிய எண்ணற்ற ஊர்களிலும் கடுமையான வறட்சி நிலவுகிறது. மனிதர்கள் குடிப்பதற்கே தண்ணீர் கிடைப்பதில்லை. எல்லா இடங்களிலும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தாகத்தினால் இந்த மாடு சற்றே முரண்டு பிடித்து, என் பிடியில் இருந்து நழுவி வெறி பிடித்தது போல் ஓட ஆரம்பித்தது. நல்லவேளையாக இந்த மாட்டின் தேவையைப் புரிந்து கொண்டு தண்ணீரை வைத்ததால், குடித்து விட்டு சாந்தமாகி விட்டது. உங்களின் இந்த உதவியை மறக்க முடியாது ஸ்வாமி’’ என்று மராத்தி மொழியில் கூறினார். அப்போது அவரது கண்கள் கலங்கிய நிலையில் காணப்பட்டன.
அவர் சொன்னதைப் புரிந்து கொண்ட மகா பெரியவா, ஒரு புன்னகையுடன் ஆசிர்வதித்து, எண்ணற்ற பழங் களை பிரசாதமாகக் கொடுத்தார். மாட்டை ஓட்டி வந்தவர் அதை சந்தோஷமாகவும் நன்றியுடனும் வாங்கிக் கொண்டார்.
வெறியுடன் ஓடி வருகிற மாட்டை உள்ளூர்க்காரர்கள் பார்த்தார்களே தவிர, எதனால் மாட்டுக்கு இந்த வெறி வந்தது என்பதை கவனிக்கத் தவறி விட்டார்கள். ஆனால், அதற்கான காரணத்தை நொடிப் பொழுதில் கண்டறிந்த மகான் சட்டென்று செயல்பட்டு, அதன் மூர்க்கத்தை அடக்கினார்.
வாயில்லா ஜீவன்களுக்கும் அருளும் அந்த ஜகத்ரட்சகன் இந்த மாட்டின் தாகத்தை உணர்ந்து அதற்கு ‘தாக சாந்தி’ செய்து வைத்திருக்கிறார்.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், மகா பெரியவா யாத்திரை செய்து கொண்டிருந்த இந்தப் பகுதிகள் முழுக்கக் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தால் தவித்துக் கொண்டிருக்கக் கூடியவை. மகானுக்குக் கைங்கர்யம் செய்யும் அன்பர்கள் அவர் தண்ணீருக்காகக் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதற்காக சிரமப்பட்டு எங்கிருந்தோ இரண்டு டின் தண்ணீரைச் சேர்த்து வைத்திருந்தார்கள். அதைத்தான் இந்த வண்டியில் பத்திரமாகப் பாதுகாத்தபடி கொண்டு வந்தார்கள். அதையும் மாட்டுக்கு தானம் கொடுத்து விட்டார் மகா பெரியவா.
தாகத்தால் குழந்தை தவிக்கும்போது தாயாகப்பட்டவள் எப்பாடு பட்டேனும் தண்ணீர் கொடுத்து விடுவாள் அல்லவா? அதுபோல்தான், சர்வ லோகத்துக்கும் தாயான மகா பெரியவா, தாகத்துடன் வந்த மாட்டுக்குத் தான் அருந்துவதற்கு வைத்திருந்த தண்ணீரைக் கொடுத்து அருள் புரிந்திருக்கிறார்.
ஒருவருக்கு நாம் எதையேனும் தானம் தருகிறோம் என்றால், அதை சிரத்தையோடு கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது என்கின்றன வேத நூல்கள்.
பிறருக்குக் கொடுக்கின்றபோது முகத்தை சந்தோஷமாக வைத்துக் கொண்டு தரவேண்டும். முகத்தைச் சுளித்துக் கொண்டோ, அருவருப்பு அடைந்தோ தரக்கூடாது. ‘இன்னும் அதிகமாகத் தருவதற்கு நம்மிடம் ஒன்றும் இல்லையே’ என்ற எண்ணத்தோடு தரவேண்டும்.
மகா பெரியவா அப்படித்தான் தன்னிடம் இருந்த இரண்டு டின் தண்ணீரையும் கொடுத்தார். ஒருவேளை அப்போது அவரிடம் இன்னும் கூடுதலாக தண்ணீர் இருந்திருந்தால், அதையும் அந்த மாட்டுக்குத் தாரை வார்த்திருப்பார்.
இதன்பின் அங்கிருந்து தன் நடை யாத்திரையைத் தொடர்ந்தார் பெரியவா.
எங்கு போனாலும் நடைதான்!
மகானின் பிஞ்சுப் பாதங்கள் எத்தனையோ காடுமேடு களையும், மலைகளையும் முகடுகளையும், கரடுமுரடான சாலைகளையும் சந்துபொந்துகளையும் பார்த்துள்ளது.
மகா பெரியவா முழுக்க முழுக்கப் பல்லக்கிலேயே (மேனா) அமர்ந்தபடி வலம் வந்த காலமும் உண்டு. பல்லக்கில் இருந்தபடியே தரிசனம் தருவார்; சில நேரங்களில் இரவு வேளைகளில் பல்லக்கிலேயே ஓய்வும் எடுப்பார். அப்போது பல்லக்கின் நாலாபுறமும் மூடப் பட்டிருக்கும். காற்றே புக முடியாத இதற்குள் எப்படி மகா பெரியவா ஓய்வெடுக்கிறார் என்று மடத்தின் காரியதரிசிகள் வியந்தது உண்டு.
இந்தப் பல்லக்கை சுமந்து வருகிற அன்பர்களை ‘போகிகள்’ என்று அழைப்பர். இந்த போகிகளுக்கு மடத்திலும், பக்தர்களிடத்திலும் நிறைய மரியாதை உண்டு. காரணம், கலியுக தெய்வமாக விளங்குகிற மகானையே தாங்கிச் செல்கிற பாக்கியம் பெற்றவர்கள் என்பதால்தான்! பொருளாதாரத்தில் நசிந்த நிலையில் காணப்படுகிற இவர்களுக்குப் பலரும் உதவுவார்கள். ஆடைகள், உணவுப் பண்டங்கள் தருவதுண்டு.
தன்னைத் தரிசிக்க வருகிற சில பக்தர்களிடமே மகா பெரியவா சொல்வார்: ‘‘அந்த போகிகள்லாம் வெளில உக்காந்துண்டிருப்பா. அவாளுக்கு ஏதாவது குடுத்துட்டுப் போ.’’
அதற்கு ஏற்றாற்போல் அந்த போகிகளும் பணத்தாசை இல்லாமலேயே இருந்தார்கள். யாரைப் பார்த்தாலும் ‘எங்களுக்கு அதைக் குடுங்கோ... இதைக் குடுங்கோ’ என்று ஏதும் கேட்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மகான் அவர்களை நன்றாகவே, திருப்தியாக வைத்திருந்தார்.
ஒருமுறை சென்னை மயிலாப்பூரில் மகா பெரியவா வழக்கம்போல் பல்லக்கில் வலம் வந்து கொண்டிருந்தார். திரளான பக்தர்கள் கூடி, ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷத்துடன் ஊர்வலம் மயிலையின் வீதிகளில் போய்க் கொண்டிருந்தது.
அப்போது அதே சாலையின் மறுபுறம் நாத்திகர்கள் இணைந்து நடத்துகிற பொதுக்கூட்டம் ஒன்று மேடைபோட்டு நடந்து கொண்டிருந்தது. அவர்கள் அனைவரும் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்கள். ஒரு நாத்திகப் பேச்சாளர் மேடையில் மைக்கைப் பிடித்தவாறு பேசிக் கொண்டிருந்தார்.
அவரது பேச்சு விபரீதமாகப் போகும் என்று எவரும் நினைக்கவில்லை... மேடையில் இருந்தவர்கள் உட்பட!
(ஆனந்தம் தொடரும்)
சென்ற அத்தியாயத்தை வாசிக்க:
மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 33