ராமநாதபுரம்: திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் பட்டாபிஷேக ராமர் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. பட்டாபிஷேக ராமர் சித்திரை திருவிழா (சைத்ரோட்ஷவம்) கடந்த 13-ம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து, நாள்தோறும் சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடைபெற்றன.
காலையில் பல்லக்கு, மாலையில் கருட வாகனம், அனுமன் வாகனம், ரெட்டை கருட வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை சீதா பிராட்டியார் மற்றும் பட்டாபிஷேக ராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை 51 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் பட்டாபிஷேக ராமர், சீதாபிராட்டியார், லட்சுமணன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் பீடத்தில் வைக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தேர் உலா வந்தது. பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் மீது வாழைப் பழம், புளியம்பழம், மாங்கனிகள் உள்ளிட்டவை வீசப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ராமநாத புரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். நான்கு ரத வீதிகளிலும் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.