நாளை பகுதி சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!


சந்திர கிரகணம் - அறிவியல், ஆன்மிக காரணங்கள்

வானியல் ஆச்சரியங்களில் ஒன்றான சந்திர கிரகணம் நாளையும், நாளை மறுதினமும் (அக்டோபர் 28, 29 தேதிகளில்) நிகழ உள்ளது. 29ம் தேதி இந்தியாவில் இதனை வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய, சந்திர கிரகணங்கள் நிகழ்கின்றன. சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது, பௌர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமியின் நிழல் சந்திரன் மீது படிவதால் இந்த கிரகணம் தோன்றுகிறது. வானியல் அதிசயங்களில் ஒன்றான இந்த நிகழ்வு கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தென்பட்டது. இதையடுத்து இவ்வாண்டு அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையங்கள் அறிவித்துள்ளன.

சந்திர கிரகணம் விளக்கம்

அதன்படி மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்குத் தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியங்களில் இந்த பகுதி சந்திர கிரகணம் தெரியும்.

இந்த கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 1.05க்கு தொடங்கி அதிகாலை 2.24க்கு முடிவடையும். இந்த கிரகணம் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களுக்கு நீடிக்கும். அடுத்த சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி அன்று இந்தியாவில் தெரியும். ஆனால் அது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திர கிரகணம் விளக்கம்

இதனிடையே ஆன்மிகத்திலும் இந்த சந்திர கிரகணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேஷ ராசியில் நாளை அக்டோபர் 28ஆம் தேதி இரவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரன், குரு, ராகு, கூட்டணி மேஷத்தில் சேர்ந்துள்ளது. ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் நிகழும் போது துலாம் ராசியில் செவ்வாய், கேது, புதன், சூரியன், கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. இந்த கிரகங்களின் சேர்க்கை பார்வையால், குரு மங்கல யோகம், குரு சந்திர யோகம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் கிரகண யோகமும் இணைகிறது. ராகு, கேது பெயர்ச்சியோடு நிகழும் சந்திர கிரகணம் காரணமாக பல்வேறு நட்சத்திரங்கள் மற்றும் ராசியினருக்கு நன்மை பயக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பகுதி சந்திர கிரகணம் (கோப்பு படம்)

ஒரே ஆண்டில், அதுவும் ஒரே மாதத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த ஆண்டு சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள் தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 14ஆம் தேதி சூரிய கிரகணம் தோன்றிய நிலையில் தற்போது 14 நாட்கள் கழித்து சந்திர கிரகணம் தோன்றுகிறது.

x