ஆவணி மாத பவுர்ணமி: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!


திருச்செந்தூரில் நேற்று உள்வாங்கிய நிலையில் காணப்பட்ட கடல்.

தூத்துக்குடி: பவுர்ணமி தோறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து மறுநாள் தரிசனம் செய்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆவணி மாத பவுர்ணமி தினமான இன்று (ஆக.19) திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோயில் இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் டிஎஸ்பி. வசந்த்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோயில் வளாகம், கடற்கரை, சண்முகவிலாச மண்டபம், ரூ.100 கட்டண தரிசன வழி, பொது தரிசனவழி, வாகன நிறுத்தமிடம் உள்ளிட்டஇடங்களில் எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசனம் மற்றும் பொதுதரிசனம் குறித்து வழிகாட்டி பலகைகள் வைக்கவும், கூடுதலாக குடி தண்ணீர் வசதி, கழிப்பிடவசதிகள் செய்யவும், கடலில் ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் கயிறு கட்டியும், ரோந்து வாகனத்தில் சென்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட்டார்.

வழித்தடங்கள் மாற்றம், வழித்தடம் செல்லும் பாதை குறித்த விவரங்கள் அடங்கிய பலகைகள்ஆங்காங்கே வைக்க போக்குவரத்து போலீஸாரிடம் அறிவுறுத்தினார்.

கோயில் வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதால் அந்தபகுதிகளில் குழிகளை மூடி பக்தர்களுக்கு பாதுகாப்பான வசதி செய்து கொடுக்கவும், கோயில் வளாகத்தில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும், குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் பக்தர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

ஆய்வின் போது, திருச்செந்தூர் கோயில் காவல் ஆய்வாளர் கனகராஜ், தாலுகா ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, குலசேகரன்பட்டினம் ஆய்வாளர் ரகுராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

50 அடி தூரம் உள்வாங்கிய கடல்: திருச்செந்தூர் கோயில் கடல் நேற்று காலை திடீரென 50 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் திருச்செந்தூரில் கடல் அடிக்கடி உள்வாங்கி காணப்படும்.

இந்நிலையில் ஆவணி மாத பவுர்ணமிக்கு முந்திய நாளான நேற்று அதிகாலை திருச்செந்தூர் கோயில் கடல் திடீரென 50 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் தண்ணீருக்கடியில் இருக்கும் பாறைகள் வெளியே தெரிந்தன. பக்தர்கள் அச்சமின்றி கடலில் நீராடினர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் கடல் இயல்பு நிலையை அடைந்தது.

x