பரபரப்பு... தசரா ஊர்வலத்திற்கு வந்தபோது குட்டி ஈன்ற யானை... நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அதிர்ச்சி!


குட்டியுடன் நேத்ராவதி, ஹேமாவதி யானைகள்

தசரா பண்டிகை ஊர்வலத்திற்காக அழைத்து செல்லப்பட்ட யானை, குட்டியை ஈன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகை உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதன் ஒரு பகுதியாக ஷிவமோகா சாமுண்டீஸ்வரி ஆலயத்தில், ஜம்போ யானைகள் சவாரி நடத்தப்படும். யானைகளின் மேல் வலம்வரும் சாமுண்டீஸ்வரியை காண லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள்.

இதற்காக மாநிலம் முழுவதிலிமிருந்து, வளர்ப்பு யானைகள் வரவழைக்கப்படுவது வாடிக்கை. அந்த வகையில் சக்கரபாயு முகாமிலிருந்து சிவமோகாவிற்கு நேத்ராவதி என்ற பெண் யானை அழைத்து வரப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒத்திகை ஊர்வலத்தில் நேத்ராவதி யானை கலந்து கொண்டிருந்தது.

சாகர், ஹேமாவதி, நேத்ராவதி யானைகளுக்கு வரவேற்பு

இந்நிலையில் இரவு அங்குள்ள பள்ளி வளாகம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த நேத்ராவதி யானை பெண் குட்டி ஒன்றை ஈன்றது. இது வனத்துறை அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நேத்ராவதி யானைக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யானை கர்ப்பமாக உள்ளது தொடர்பாக எந்த தகவலும் தெரிய வரவில்லை.

இதையடுத்தே இந்த யானை பேரணிக்காக அழைத்துவரப்பட்டிருந்தது. தற்போதைக்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும், இருப்பினும் குட்டியின் நலன் கருதி தொடர்ந்து இரு யானைகளையும் கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த பல ஆண்டுகளாக நேத்ராவதி, சாகர் மற்றும் பானுமதி ஆகிய மூன்று யானைகள் ஷிவமோகாவில் நடைபெறும் ஜம்போ சவாரியில் பங்கேற்று வந்துள்ளன. இந்த ஆண்டு பானுமதி யானை கர்ப்பமாக இருப்பதால், அதற்கு பதிலாக ஹேமாவதி யானை அழைத்து வரப்பட்டிருந்தது.

தற்போது நேத்ராவதி யானை, குட்டியை ஈன்றுள்ளதால் இவ்வாண்டு சாகர் யானை சிலைகள் எதையும் சுமந்து செல்லாது எனவும், டிராக்டரில் சாமுண்டீஸ்வரி சிலை எடுத்துச் செல்லப்படும் எனவும் விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

x