பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்துகொள்ள 961 பேர் முன்பதிவு!


அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முன்னிட்டு பழநியில் கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் .

பழநி: பழநியில் ஆக.24 மற்றும் 25-ம் தேதிகளில் நடக்க உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள 961 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இங்கிலாந்து, மலேசியா, தென் ஆப்பரிக்காவை சேர்ந்தவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் ஆக.24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் பதிவு மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோருக்கு தனி வலைதளம் கடந்த மே 28-ம் தேதி தொடங்கப்பட்டு, ஆக.15-ம் தேதி வரை பதிவுகள் நடைபெற்றன. மாநாட்டில் பங்கேற்க விரும்பும் உள்நாட்டினருக்கு ரூ.500, வெளி நாட்டினருக்கு ரூ.1,000 முன்பதிவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து 39 ஆய்வுக் கட்டுரைகள் உட்பட மொத்தம் 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. உள்நாட்டினர் 774 பேர், வெளிநாட்டினர் 187 பேர் என மொத்தம் 961 பேர் மாநாட்டில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு மாநாடு நடைபெறும் 2 நாட்களும் 6 வேளை உணவு, சிறப்பு பிரசாதம் வழங்கவும், மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2,000 பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல், 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவுக் கூடம், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு விருந்தினர்கள்: மாநாட்டில் 2 நாட்களும் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில், சிறப்பு விருந்தினர்களாக மலேசியாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் ஒய்.பி.டத்தோ ரமணன், ராமகிருஷ்ணன், இங்கிலாந்து இப்ஸ்விச் மேயர் இளவழகன், தென் ஆப்பிரிக்கா மாகாண சட்ட அவை உறுப்பினர் லெஸ் கவண்டர், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், மலேசியா சிலாங்கூர் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வேரமன், மலாக்கா மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், மொரீசியஸ் தமிழ் கோயில்கள் கூட்டிணைப்பு தலைவர் செங்கண் குமரா, இங்கிலாந்து துணை மேயர் அப்பு தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

x