திருநாகேஸ்வரத்தில் புதுச்சேரி முதல்வர் வழிபாடு... அரசியல் சிக்கல்கள் தீர பிரார்த்தனை!


ராகு பகவான் சன்னதியில் விளக்கு ஏற்று வழிபடும் முதல்வர் ரங்கசாமி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இருக்கும் நவக்கிரக தலங்களில் ராகு பகவான் தலமான திருநாகேஸ்வரத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழிபாடு செய்தார்.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக ராகு பகவான் அருள் பாலிக்கிறார். இந்த கோயிலுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை வந்தார். அவருக்கு கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் நாககன்னி, நாகவல்லி சமேத ராகு பகவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ராகு தோஷம் நீங்க தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி ரங்கசாமி வழிபாடு செய்தார். பின்னர், நாகநாத சுவாமி மற்றும் கிரிகுஜாம்பிகை சன்னதிகளுக்குச் சென்று வழிபட்டார்.

திருபுவனம் கோயிலில் ரங்கசாமி

அதைத்தொடர்ந்து திருபுவனம் சென்ற ரங்கசாமி அங்குள்ள சரபேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு சுவாமி அம்பாளை தரிசனம் செய்த அவர் தனது அரசியல் எதிரிகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர பிரார்த்தித்துக் கொண்டார். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பாக சரபேஸ்வரர் புகைப்படம் வழங்கப்பட்டது.


இதையும் வாசிக்கலாமே...

இன்று மகாளய அமாவாசை... இதைச் செய்தால் கடன் தொல்லைத் தீரும்!

x