இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க... வானத்தில் தோன்றும் வர்ணஜாலத்தை இந்த தலைமுறையினருக்கு பார்க்க வாய்த்திருக்கிறது. 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் தோன்றும் அரிய கிரகணம் நிகழ்வது, வானியல் அறிஞர்களையும், ஆன்மிக பக்தர்களையும் ஒருசேர பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர, சூரிய கிரகணங்கள் ஏற்படுகிறது. சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு வரும் போது சூரியனின் வெளிச்சம் மறைவதால் சூரிய கிரகணம் தோன்றுகிறது.
மிகவும் அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் ஆண்டின் பல்வேறு தருணங்களில் நடைபெற்றாலும், மனிதர்களின் கண்ணுக்குத் தெரியும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவானது. அந்த வகையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்..
அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்ஸிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில், மிகவும் அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது. கிரகணத்தின் போது, சூரியனைச் சுற்றிலும் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும்.
இந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வைக் காண முடியும். சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணையதளத்தில் இந்த நிகழ்வை காணலாம். இந்த நிகழ்வை காண வானியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் ஆர்வமாக உள்ளனர்.
இந்திய நேரப்படி இன்றிரவு 8.34 மணி முதல் நள்ளிரவு 2.25 மணி வரை இந்த அரிய சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால் இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்க முடியாது.
ஆன்மிக ரீதியாகவும், இந்த சூரிய கிரகணத்தை பக்தர்கள் பலரும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர். குறிப்பாக, பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் இந்த கிரகணம் ஏற்படுவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
ஜோதிட சாஸ்திரப்படி, 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய வகை கிரகணம் நிகழவுள்ளது. இதனால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நன்மை தரும் என நம்பப்படுகிறது. பல ஆண்டு காலத்திற்கு புண்ணியமும், முன்னோர்களின் ஆசியும் இந்த நாளில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று கோயில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளது. கிரகணம் முடிவுற்ற பிறகு சிறப்பு பூஜைகளுக்கு கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் வருகை தருவார்கள், என்பதால் முக்கூடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.