பத்தாம் வகுப்பு தேர்வு... அரசு முக்கிய அறிவிப்பு; மாணவர்கள் மகிழ்ச்சி!


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள்

நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் வசதிக்காக புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்வு மையங்கள் குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. வழக்கமாக தேர்வு மைய அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தான் பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் அருகிலுள்ள வேறொரு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும்.

போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லை என்றாலோ, சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றாலோ அந்த பள்ளியில் தேர்வு மையம் அமைக்க அனுமதி தரப்படாது. எனவே வேறொரு பள்ளிக்கு சென்றுதான் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும். இந்த புதிய சூழல் சில மாணவர்களுக்கு சிரமமாக இருந்தது.

இந்நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணை இயக்குநர் நரேஷ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு மையங்களை மாற்றும் கோரிக்கைகள் இருந்தால், அதுதொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வு மையம் மாற்றம் கோரும் இணைப்பு பள்ளிகள் தொடர்பான விவரங்களை தெரிவிக்கலாம். இதற்கான விண்ணப்பமும் கூடவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள்

அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் கையொப்பத்துடன் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்கக முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் dgeb3sec@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் அருகருகே உள்ள இரண்டு பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 100க்கும் மேல் இருந்தால், அவற்றில் ஒரு பள்ளியில் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் மாணவர்கள் தொலைதூரம் சென்று பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை. அருகிலேயே தேர்வு எழுத முடியும்.
அரசின் இந்த நடவடிக்கை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x