ராமர் கோயில் கும்பாபிஷேகம்... குடியரசு தலைவருக்கு அழைப்பு!


குடியரசு தலைவரிடம் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பு வழங்கப்பட்டது

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கும் ஒருவழியாக அழைப்பிதழை ராமர் கோயில் அறக்கட்டளையினர் வழங்கியுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் 22-ல் நடக்க உள்ளது. இதில், பிரதமர் மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், நாட்டின் முதல் குடிமகளான குடியரசு தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. ஏற்கெனவே புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போதும் அவருக்கு இறுதிநேரம் வரை அழைப்பிதழ் கொடுக்காமல் தவிர்த்து விட்டு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. அதனால் அவரோ மிகுந்த நாகரீகத்துடன் திறப்பு விழாவுக்கு வருவதை தவிர்த்துவிட்டு, வாழ்த்துச்செய்தி மட்டும் அனுப்பி இருந்தார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இந்நிலையில் நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பார்த்துப் பார்த்து அழைத்து கொடுத்தவர்கள் குடியரசு தலைவருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்காமல் தவிர்த்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனால் ராமர் கோயில் விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்பாரா? அவருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்விகள், கடந்த சில நாட்களாகவே டெல்லியில் வட்டமிடத் தொடங்கின.

இதற்கு விடை தரும் விதமாக, ராமர் கோயில் அறக்கட்டளையின் பணிக்குழு தலைவர் நிர்பேந்திர மிஸ்ரா, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் லால் ஆகியோர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேற்று நேரில் சந்தித்து, ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை அளித்தனர். ஆனாலும் நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை போலவே இதையும் குடியரசுத் தலைவர் புறக்கணிப்பாரா அல்லது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வாரா என்பது இனிதான் தெரிய வரும்.

இதையும் வாசிக்கலாமே...

x