இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய ஆஞ்சநேயர் நமக்கு அருளட்டும்: ஆளுநர் ரவி வாழ்த்து!


அனுமன்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி

ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் அனுமனும் ஒன்று. ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் அனுமன் சிவபெருமானின் ருத்ர அம்சமாகவும் கருதப்படுகிறார்.

வானர குலத்தைச் சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர் அனுமன். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

அதே சமயம் இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் வடமாநிலங்களில் சித்திரை மாதத்திலேயே அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசை தினமான இன்று (ஜனவரி 11) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு 08.05 மணி தொடங்கி, இன்று மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. அதனால் இன்றைய தினத்தை அனுமன் ஜெயந்தி விழாவாக பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் ஆஞ்சநேயர், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் உட்பட பல்வேறு புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களிலும் ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சென்று ஆஞ்சநேயரை தரிசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி தமிழ்நாடு மக்களுக்கு அனுமன் ஜெயந்தி விழா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அனுமன்

"ஆஞ்சநேயர் ஜெயந்தி திருநாளில் தமிழ்நாட்டின் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஸ்ரீ ராமரின் தீவிர பக்தரான ஆஞ்சநேயர் வலிமை, ஞானம், சேவை, பக்தி ஆகியவற்றின் உருவகம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடையச் செய்ய ஆஞ்சநேயர் நமக்கு அருளட்டும்" என்று ஆளுநர் ரவி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

x