ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட மாபெரும் கிடா விருந்து திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பல்வேறு இடங்களிலும் இந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மழை பெய்ய வேண்டும் என்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலரும் பலவித சிறப்புப் பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாகக் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் தொடங்கிப் பல வழிகளில் மழை வேண்டி பிரார்த்தனைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.
அப்படியொரு வினோதமான பூஜை தான் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நேற்று நடந்துள்ளது. அங்குள்ள முதல்நாடு கிராமத்தில் போதியளவில் இந்தாண்டு மழை பெய்யவில்லை. இதனால் மழை பெய்ய வேண்டி ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் சிறப்பு வழிபாடு கிடா விருந்துடன் நடத்தப்பட்டது.
எல்லைப் பிடாரி அம்மனுக்கு மண் பீடம் அமைத்து இந்த சிறப்புப் பூஜை நடைபெற்றது. காட்டுப் பகுதியில் நடந்த இந்த வினோத வழிபாட்டில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது வார புரட்டாசி சனிக்கிழமை நடைபெறும் இந்த திருவிழா, இந்த ஆண்டும் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆண்கள் பயிர்களுக்கு மழை பெய்ய வேண்டியும் இயற்கை சீற்றங்களில் இருந்து விவசாயிகளைப் பாதுகாத்திட வேண்டியும் பூஜை செய்தனர். இதற்காக நள்ளிரவில் அங்குத் திரண்ட ஆண்கள் சிறப்புப் பூஜை செய்தனர். மேலும், 101 கிடா ஆடுகளையும் பலியிட்டு எல்லைப் பிடாரி அம்மனுக்கு படையலிட்டனர். அதைத் தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட ஆண்களுக்குப் பிரசாதமாகக் கறி விருந்தும் நடைபெற்றது.
ஆட்டுக் கிடா கறியை கைக்குத்தல் அரிசிச் சாதத்துடன் உருண்டைகளாக பிடித்து அதை சாமிக்குப் படைத்தனர். எல்லைப்பிடாரி அம்மனுக்கு பூஜைகள் முடிந்தபிறகு சாத உருண்டைகளில் கறிக்குழம்பைச் சேர்த்து உண்டனர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த வினோத வழிபாட்டில் கமுதி சுற்று வட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இங்கிருந்த எந்தவொரு பொருட்களையும் பெண்கள் பார்க்கக் கூடக்கூடாது என்பதால் மீதியிருந்த உணவு, பூஜை பொருள்களை அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த பூஜை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் நல்ல மழை பெய்து ஊரும், நாடும் செழிக்கும் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.