251 அடி உயரத்தில் உலகில் உயரமான ராமர் சிலை: சரயு நதிக்கரையில் அமைக்க உ.பி முதல்வர் முடிவு!


அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்ததாக ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராமர் சிலை

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அன்றைய தினமே குழந்தை வடிவத்தில் செய்யப்பட்ட ராமர் சிலையும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்ய உள்ள இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளிலும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

இந்த நிலையில் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரை அல்லது பார் மஞ்சா காட் பகுதியில் ராமருக்கு உலகில் உயரமான சிலை வைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சிலை செய்ய உள்ளவரான பிரபல சிற்பி நரேஷ் குமாவத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், ராமருக்கு 251 அடியில் உலகின் மிக உயரமான சிலை வைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் யோசித்து வருவதாகவும், அவரது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ராமர் சிலையை வடிவமைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சிலை சரயு நதிக்கரையில் நிறுவ ஆலோசிக்கப்பட்டதாகவும் பின்னர் அதனை பார் மஞ்சா காட் பகுதியில் நிறுவ உத்தேசித்துள்ளதாகவும் கூறிய அவர்,விரைவில் இந்த சிலை வடிவைமைக்கும் பணியைத் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில்

உலகின் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 230-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியாவின் தேசிய தலைவர்களின் சிலைகள் மற்றும் ராமர், கிருஷ்ணர், புத்தர் உள்ளிட்ட கடவுள் சிலைகளை சிற்பி நரேஷ் குமாவத் வடிவமைத்துள்ளார். இவர்தான் உலகின் உயரமான ராமர் சிலையையும் வடிவமைக்கப் போகிறார்.

x