பழனியில் மீண்டும் ரோப் கார் சேவை... பக்தர்கள் மகிழ்ச்சி!


பழனியில் ரோப் கார் சேவை 50 நாட்களுக்கு பின் துவக்கம்

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலில் ஆண்டு பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த ரோப் கார் சேவை, 50 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் துவங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3வது வீடான இங்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் தரிசனத்திற்காக வருகை தரும் நிலையில், அவர்களின் பயன்பாட்டிற்காக அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு செல்ல வின்ச் கார்கள் மற்றும் ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ரோப் கார் சேவை பக்தர்களின் வரவேற்பை பெற்றுள்ள ஒன்றாகும். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகளுக்காக சில நாட்கள் ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

பழனி தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில்

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, ஆண்டு பராமரிப்பிற்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தீவிரமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று முதல் ரோப் கார் சேவை மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x