நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டமைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் இந்துக் கோயில், அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு காண்கிறது.
நியூ ஜெர்சியின் ராபின்ஸ்வில்லி நகரத்தில் அமைந்துள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சுமார் 12,500 பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உழைப்பால் உருவாகி உள்ளது. 2011-ல் தொடங்கிய கட்டுமானப் பணிகள், 12 ஆண்டுகள் நிறைவில் 2023-ல் தற்போது குடமுழுக்கு காண இருக்கிறது.
நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே எழும்பிய உலகின் மிகப்பெரும் இந்து கோவில் என்ற பெருமை இந்தக் கோயிலுக்கு சேர்ந்திருக்கிறது.
கம்போடியாவில் உள்ள 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கோர் வாட் கோயில், புராதானப் பின்னணியில் உலகின் மிகப்பெரும் இந்துக் கோயிலாகும். 500 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கம்போடியா கோயிலுக்கு அடுத்தபடியாக, தற்போதைய நியூஜெர்சி கோயில் வருகிறது.
நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலிருந்து 90 கிமீ தொலைவில், சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலின் அமைவிடம் உள்ளது. இந்து வேதங்களின் வழிகாட்டுதல்கள், வைதீக நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, சகலத்திலும் பண்டைய இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இக்கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், ஒன்பது கோபுர கட்டமைப்புகள் ஆகியவை 183 ஏக்கர் பரப்பளவிலான இந்த கோயில் வளாகத்தில் அடங்கியிருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பளிங்கு, கிரானைட் மட்டுமன்றி, கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான சுண்ணாம்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல் உள்ளிட்டவையும் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் சுமார் 20 லட்சம் கனஅடி கற்கள் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு கல், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை தருவிக்கப்பட்டுள்ளன. இன்று அக்டோபர் 8ம் தேதி குடமுழுக்கு காணும் இந்த கோயில், அக்டோபர் 18ம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட இருக்கிறது.