தெய்வங்கள் வேடத்தில் பக்தர்கள்: சேலத்தில் களைகட்டிய வண்டி வேடிக்கை நிகழ்ச்சி!


சிவன், பார்வ தி, விநாயகர், முருகன், நாரதர் வேடம் அணிந்து வந்த பக்தர்கள்.

சேலம்: சேலத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, மின்விளக்கு அலங்கார ரதங்களில், தேவலோக தெய்வங்கள் போல பக்தர்கள் வேடம் தரித்து உலா வந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சேலம் மாவட்டத்தில் அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் நூற்றாண்டுக்கு மேலாக பிரசித்தி பெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி நேற்று மாலை வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

அலங்கார வாகனங்கள்: இதையொட்டி சேலம் குகை, திருச்சி மெயின் ரோடுகளில் நடந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று மதியம் முதல் வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டு காத்திருந்தனர். ஒவ்வொரு வீதிகளிலும் இருந்தும் பல வண்ண அலங்கார மின் விளக்கு, மின் ஜோடனை செய்து, அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் தேவலோக தெய்வங்கள் வேடம் தரித்த பக்தர்கள் அணிவகுத்தனர்.

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் ஆடிப் பண்டிகையை யொட்டி
நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஞ்சாலியுடன்
பஞ்ச பாண்டவர்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் தெய்வங்களின் வேடமணியும் பக்தர்கள், விரதம் இருந்து கடவுள் உருவங்களைத் தத்ரூபமாக தரித்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகளை கண் முன்னே காட்டும் விதமாக ராமாயணம், மகாபாரதங்களில் வரும் ராமர், கிருஷ்ணர், அனுமன், சிவன், லட்சுமி, பார்வதி, பராசக்தி, சரஸ்வதி உள்ளிட்ட தெய்வங்களின் உருவங்களை தத்ரூபமாக தரித்து, மின் விளக்கு அலங்கார வண்டிகளில் வந்த நிகழ்வை கண்டு மக்கள் வியந்தனர்.

அலங்கார வாகனங்கள், குகை மாரியம்மன் கோயிலை மூன்று முறை வலம் வந்து, பொதுமக்கள் நின்றிருந்த திருச்சி மெயின் ரோடு வழியாக வந்து சென்றன. வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளாக மக்கள் வந்திருந்தனர்.

கடவுள் வேடமிட்டு மின் ஜோடனையுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

மக்கள் பிரமிப்பு: சிவன், பார்வதி, லட்சுமி, விநாயகர், முருகன் ஆகியோர் கைலாயத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும் வண்டியில் ஊர்வலமாக வந்தனர். அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது, மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, வள்ளி, தெய்வானை வேடமிட்டு வந்தனர். பிரம்மிக்க வைக்கும் வண்டி வேடிக்கையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர்.

சேலம் குகை மாரியம்மன் கோயில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மெயின் ரோடு, பெரியார் வளைவு, குகை, ஜவுளிக் கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

x