திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் முதல் செங்கரை காட்டுச் செல்லியம்மன் வரை - ஆடியில் அம்மன் தரிசனத்திற்கான 10 கோயில்கள்


திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன்: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ளது வெயிலுகந்தம்மன் திருக்கோயில். சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு அன்னை பராசக்தி, காட்சி கொடுத்த திருத்தலம் இது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் இக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜை செய்து, அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.

‘வேல் ஈந்த அம்மன்’ என்ற சொல்லே, ‘வேலீந்த அம்மன்’ என்றாகி, பின் ‘வெயிலுகந்த அம்மன்’ ஆக மாறியதாக கூறப்படுகிறது. தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்பாளுக்கு பாரம்பரியமாக யாமள ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.

இங்குள்ள வதனாரம்பரத் தீர்த்தத்தில், ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் நீராடி, மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை அணிந்து, வெயிலுகந்த அன்னையை வணங்கினால் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். திருமண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் முருகனுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக, வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதிக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறார். அதன் பிறகே சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் தொடங்கும்.

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மகாதானபுரம் ஊராட்சி தெற்கு மேட்டுமகாதானபுரத்தில் உள்ளது ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படும் இந்தக் கோயில் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ ராமசாமி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ வீரபத்ரர், ஸ்ரீ கால பைரவர் சந்நிதிகள் உள்ளன.

பல நூறாண்டுகளுக்கு முன் இப்பகுதி மேய்ச்சல் நிலமாக இருந்தபோது, கால்நடைகள் குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்ததால், அந்த இடத்தை அப்பகுதி மக்கள் மண்வெட்டியால் தோண்டிப் பார்த்தபோது, பூமிக்கு அடியில் சுயம்புவாக மகாலட்சுமி அம்மன் சிலை வெளிப்பட்டது. அப்போது, மண்வெட்டி பட்டதால் சுயம்பு மகாலட்சுமியின் இடது காது சேதமடைந்த நிலையில் உள்ளது. பின்னர், அந்தச் சிலையை நிறுவி, கோயில் கட்டி பூஜைகள் செய்து வந்தனர்.

பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெறும். சுயம்புவாக அம்மன் வெளிப்பட்டது ஆடிப்பெருக்கு நாளாக அமைந்ததால், ஆண்டுதோறும் ஆடிப்பெருக்குக்கு மறுநாளான ஆடி 19-ம் தேதி கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இதற்காக பக்தர்கள் ஆடி முதல் நாள் தொடங்கி 18 நாட்களுக்கு விரதம் இருந்து, ஆடிப்பெருக்கு நாளன்று அம்மனை காவிரியில் நீராட்டி, ஆடி 19-ம் நாள் பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காயை உடைத்து மகாலட்சுமி தாயாரை வழிபடுவார்கள். இப்படி செய்தால், தேங்காய் சிதறுவதுபோல, தங்களின் பிரச்சினைகளும் சிதறிப்போகும், வேண்டுதலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆண்டும் இந்த வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது.

திருக்கழுக்குன்றம் திருமலை சொக்கம்மன்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப் பாதையில், மலையையொட்டி சொக்கம்மன் கோயில் அமைந்துள்ளது. சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த தம்பதியர், வேதகிரீஸ்வரரிடம் வேண்டியதின் பேரில், பெண் குழந்தை ஒன்று பிறக்க, குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஆலோசித்தபோது ‘சொக்கம்மாள்’ என பெயர் சூட்டுமாறு அசரீரி ஒலித்ததது.

இதன்பேரில், ‘சொக்கம்மாள்’ என பெயரிட்டு வளர்த்தனர். சொக்கமாளுக்கு திருமண வயதான போது, அதுபற்றி முடிவெடுக்க, வேதகிரீஸ்வரர் மலையை வலம் வந்து ஆலோசிக்கலாம் என உறவினர்கள் கூற, மலையை வலம் வந்த சொக்கம்மாளுக்கு வேதகிரீஸ்வரர் காட்சி யளித்து மலையின் மீது அழைத்து சென்றார்.

பெண்ணைக் காணாமல் திகைத்த பெற்றோர், இறைவனின் பெயரை கூறி கதறியதால், சுவாமி சொக்கம்மாளுடன் அவர்களுக்கு காட்சியளிக்க, தங்களின் அன்புக்காக பரமேஸ்வரியே குழந்தையாக தங்களிடம் வளர்ந்ததையும், இனி தங்களுடன் அவள் வரமாட்டாள் என்பதையும் அந்தப் பெற்றோர் உணர்ந்தனர்.

தங்களுக்கு காட்சியளித்த அந்த இடத்தில், தங்களை நேரில் வந்து வணங்கும் பக்தர்களுக்கு புத்திரப்பேறு, மாங்கல்ய பேறு, செல்வப் பேறு, பிணி நீக்கம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என அந்தப் பெற்றோர் வரம் கேட்க, அந்த வரத்தை வேதகிரீஸ்வரர் வழங்கியதாக இக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. இதன்பேரில், இப்பகுதியில் திருமலை சொக்கம்மன் கோயில் அமைக்கப்பட்டது. இன்றும் சொக்கம்மாளை தரிசிக்க வரும் பக்தர்கள் தொட்டில் கட்டி, அம்மனை வணங்கி வருகின்றனர்.

நத்தம் மாரியம்மன்: தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கோயிலின் வெளிப்பிரகாரம் கருங்கற்களால் கட்டப்பட்டு, அழகுடன் காட்சியளிக்கிறது.

இந்தக் கோயிலில் 22 கல் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு வருகின்றனர். 15 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் தொடக்கமாக நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு அணிந்து, கரந்தமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

இத்திருவிழாவில், அம்மனை வேண்டி, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்குவது சிறப்பு அம்சம். திருவிழாவில் நடைபெறும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுண்டு.

இதைக் காண சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக கூடுவது உண்டு. நத்தம் மாரியம்மன் கோயில் அபிஷேக தீர்த்தம் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாத சிறப்பு வழிபாடுகளும் நத்தம் மாரியம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பகல் 12 மணிக்கு அடைக்கப்படும், மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

முப்பந்தல் இசக்கியம்மன்: தென் மாவட்டங்களிலும், கேரளத்திலும் இசக்கியம்மன் வழிபாடு முக்கியமானது. ‘யட்சி’ என்பதே ‘இசக்கி’ என மருவியதாகக் கூறப்படுகிறது. இசக்கியம்மன் கோயில்களில் தலைமை பீடமாக முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் திகழ்கிறது.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 13 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் இக்கோயிலில் காணிக்கை செலுத்திய பிறகே பயணத்தை தொடர்கின்றனர்.

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் ஒன்றாக கூடி பந்தல் அமைத்து, தமிழ்ப்புலவர் அவ்வையார் தலைமையில் தங்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து தீர்வு கண்டதாகவும், இதன் விளைவாக ‘முப்பந்தல்’ என்று இத்தலத்துக்கு பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கையில் குழந்தையுடன் காட்சி தரும் இசக்கியம்மன் பற்றிய நாட்டுப்புற கதைகள் ஏராளமாக உள்ளன. முப்பந்தல் இசக்கியம்மன் அக்காலத்தில் மிகவும் ஆவேசத்துடன் விளங்கியதாகவும், தமிழ் மூதாட்டி அவ்வையார், அம்மனை சாந்தப்படுத்தியதாகவும் புராண வரலாறு உள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில், முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. முப்பந்தல் கோயில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். குழந்தை வரம், ஆரோக்கியம் வேண்டுவோருக்கும், பிணி தோஷங்களுக்கும் சிறந்த பரிகார தலமாக இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பாகும்.

அய்யா வாடி பிரத்தியங்கிரா தேவி: கும்பகோணம் அருகே உள்ள ஐவர்பாடி என்றழைக்கப்படும் அய்யாவாடியில் பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. 4 சிம்மம் பூட்டிய ரதத்தில், 18 கைகளுடன், சிம்ம முகத்தில் லட்சுமி சரஸ்வதியோடு பிரத்தியங்கிரா தேவி இங்கு காட்சி தருகிறார். இவர், சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. ‘பத்ரம்’ என்றால் ‘மங்கலம்’ என்பது பொருள்.

பக்தர்களுக்கு என்றும் மங்கலத்தையே அளிப்பவர் ஆதலால், இவருக்கு பத்ரகாளி என்ற பெயர் உண்டு. இந்த பத்ரகாளி அம்மனே பிரத்தியங்கிரா தேவியும் ஆவார். ப்ரத்தியங்கிரஸ், அங்கிரஸ் என்னும் இரு ரிஷிகள் இக்காளியின் மந்திரத்தை கண்டுபிடித்ததால், இவர்களது பெயர்களை இணைத்து பிரத்தியங்கிரா தேவி என அழைப்பதாக கூறுவதுண்டு. எள்ளும், புஷ்பமும் கொண்டு பூஜிப்பதால் ஆனந்தம் அடைவார்.

பகைவர்களை நாசம் செய்பவர்; பில்லி, சூன்யம், ஏவல் போன்ற மந்திர தந்திரங்களைத் தூள் தூளாகச் செய்பவர்; மூன்று கண்கள் உடைய இவரை, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

பஞ்சபாண்டவர்கள், பிரத்தியங்கிரா தேவியை வேண்டி தவமிருந்து வழிபட்டு இழந்த கவுரவம், செல்வம், ராஜாங்கத்தை மீட்டெடுத்தார்கள் என்றும் கூறப்படுவது உண்டு. இங்கு நடக்கும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்றால், இழந்த பதவி மீண்டும் கிட்டும், எதிரிகளின் தொல்லை விலகும், கடன் தொல்லை தீரும், உத்தியோக உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்பு உருவாகும். வியாபாரம் செழிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சேலம் பலப்பட்டரை மாரியம்மன்: சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையில் 400 ஆண்டுகால பழமையான பலப்பட்டரை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தயிர் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி, தன் கூடையில் மாரியம்மன் சிலையை சுமந்து கொண்டு செல்ல, செல்லும் வழியில், இளைப்பாறுவதற்காக அம்மாப்பேட்டை பகுதியில் அதை கீழே வைக்க, அச்சிலையை அவரால் அங்கிருந்து எடுக்க முடியவில்லை.

அதன்பின் அம்மனை அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்ய, பக்தர்களுக்கு தொடர்ந்து அருள்பாலித்து வருகிறாள். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்ரா பவுர்ணமி, ஆனி, ஆடித் திருவிழா, புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசியில் தீபாவளி நன்னாள் என விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஜூலை 23-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கிய ஆடித் திருவிழாவில் ஆக.7-ம் தேதி பொங்கல் வைத்தல் நிகழ்வும், அதைத் தொடர்ந்து உருளுதண்டம், பூமிதித்தல் நிகழ்வும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு, 13-ம் தேதி பால்குட ஊர்வலத்துடன் ஆடித் திருவிழா நிறைவுறுகிறது.

பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் வந்து வேண்டுதல் வைத்து வழிபாடு நடத்திச் செல்வது இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம். திருமணத்தடை, சரும நோய், கண் நோய் என சகலவித நோய்களை தீர்த்து பக்தர்களை கருணை உள்ளத்தோடு காப்பாற்றி வரும் பலப்பட்டரை மாரியம்மனை அனைத்து சமூக மக்களும் போற்றி, கொண்டாடி வருகின்றனர்.

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன்: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், ‘குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை’ என்ற மிகவும் வித்தியாசமான சடங்கு நடைபெறுகிறது. இதுபோன்ற நேர்த்திக்கடனை வேறு எந்த கோயிலிலும் காண முடியாது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள எல்லையில் கொல்லங்கோட்டில் குடிகொண்டுள்ள பத்ரகாளி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.

குழந்தை இல்லாத தம்பதியினர் இக்கோயிலில் ‘தூக்க நேர்ச்சை’ நடத்திக் கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார்கள். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் தூக்க நேர்ச்சையை நிறைவேற்றுகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் இக்கோயிலில் மீன பரணி திருவிழா நடைபெறுகிறது. இதன் 9-வது நாளில் ‘தூக்க நேர்ச்சை’ நடைபெறும். இதில் தமிழக, கேரள பக்தர்கள் குவிகிறார்கள்.

மரத்தாலான ஒரு வண்டியில், சுமார் 20 அடி உயரமுள்ள இரு மரத்தடிகள் பொருத்தப்பட்டிருக்கும். கிணற்றில் நீர் இரைக்க பயன்படும் ஏற்றம் போன்று, இந்த மரத்தடிகளை 20 அடி உயரத்துக்கு மேலே ஏற்றவும், கீழே இறக்கவும் முடியும். இந்த மரத்தடிகளின் உச்சியில் உள்ள மரச்சட்டங்களில் நான்கு பேர் தொங்கிக் கொண்டு, தலா ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொள்வார்கள்.

பின்னர் கோயிலைச் சுற்றி இந்த வண்டியைத் தேர் போல இழுத்து வருவார்கள். அதன் பின்னர் அடுத்த நான்கு குழந்தைகளுடன், வேறு நான்கு பேர் இந்த மரத்தடியில் தொங்கிக் கொள்ள, வண்டி இழுத்து வரப்படும். இப்படியே, 2,000 பேர் வரை, 2,000 குழந்தைகளுடன் தூக்க நேர்ச்சையில் பங்கேற்பர். 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே தூக்க நேர்ச்சையில் பங்கேற்கின்றனர். அவசியம் காண வேண்டிய விழா இது.

செமணாம்பதி உதிர காளியம்மன்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் மலையடிவாரத்தில் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் வீற்றிருக்கிறாள் உதிர காளியம்மன். உதிர பகவதியம்மன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கேரள எல்லையில் செமணாம்பதி கிராமத்தில் மலையடிவாரத்தில் சிற்றோடை பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், அங்குள்ள எட்டி மரத்தின் கீழ் தெய்வீக சக்தி ஆட்கொண்டு இருப்பதை உணர்ந்து, மரத்தின் கீழ் உள்ள புதர்களை தூய்மைப்படுத்தினர். அங்கு உதிர காளியம்மன் சுயம்பு வடிவமாக இருந்தை கண்டு, வழிபடத் தொடங்கினர். இன்றைக்கு, பொள்ளாச்சி சுற்று வட்டாரப் பகுதியின் சிறந்த வேண்டுதல் தலமாக மாறியிருக்கிறது. பெரும்பாலும் குழந்தை பாக்கியம் வேண்டியே இந்தக் கோயிலு்ககு வருகிறார்கள்.

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் தாங்கள் உடுத்திச் சென்ற சேலையின் முந்தானையில் இருந்து சிறுபகுதியை கிழித்து, அங்குள்ள மரத்தில் கட்டிச் செல்கின்றனர். ‘சொந்த வீடு அமைய வேண்டும்’ என வேண்டி, கற்களை அடுக்கி வைத்து செல்வோரும் உண்டு. வேண்டுதல் நிறைவேறியவர்கள் கோயில் மரத்தில் தொட்டில் மற்றும் மரத்தால் ஆன சிறிய வீடுகளை கட்டி, வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், மாதந்தோறும் அமாவாசை நாட்களில், ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடிப்பெருக்கில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஒரு கோயிலுக்கான தேர்ந்த கட்டமைப்புகள் இன்றி, திறந்த வெளியில் இயற்கையோடு இயைந்து இருக்கும் இந்தக் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து, அம்மன் அருள் பெற்றுச் செல்கின்றனர்.

செங்கரை காட்டுச் செல்லியம்மன்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை யையொட்டி அமைந்துள்ளது செங்கரை காட்டுச் செல்லியம்மன் கோயில். இக்கோயில் உள்ள பகுதி, பல ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்துள்ளது. அப்போது அங்குள்ள புற்றில், இருளர் இன மக்கள் கைவிட்டு, பாம்பு உள்ளதா என பார்க்க முயன்ற போது, கையில் கல் ஒன்று தென்பட, புற்றை உடைத்து பார்க்க, அம்மன் சிலை இருந்துள்ளது.

அங்கு வந்த கிராம மக்கள் அச்சிலையை ஊருக்கு எடுத்து வர முயல, அப்போது ஒரு சிறுமி மீது அம்மன் அருள் வந்து, ‘கிராமத்தினுள் என்னைக் கொண்டு சென்று வைக்க வேண்டும் என்றால், ஒரு அடிக்கு ஒரு காவு கொடுக்க வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்க, அதையேற்ற கிராம மக்கள் காவு கொடுத்து, அம்மனை அழைத்து வர, கிராம எல்லையில், காட்டுப் பகுதியில் காவு அனைத்தும் தீர்ந்து விட, அம்மன் அங்கே அமர்ந்தார். அதைத் தொடர்ந்து அம்மனை காட்டுச் செல்லியம்மன் என்றழைத்து மக்கள் வணங்கி வர, இக்கோயில் உருவானது.

கோயில் வளாகம் முழுவதும் வேதைக் கொடிகள் படர்ந்திருக்க, அம்மன் 7 கிராமங்களுக்கு கிராம தேவதையாக விளங்குகிறாள். மருத்துவ குணமுடைய இந்த வேதைக் கொடியின் இலைகள், தை மாதத்தில் முழுவதும் உதிர்ந்து, பங்குனி 15-ம் தேதிக்குள் புத்திலைகள் தோன்றி, புது நிழல் தரத் தொடங்கி விடும். வேதைக்கொடி சூழ அமர்ந்திருக்கும் காட்டுச் செல்லியம்மனை கிராமப்புற பக்தர்கள் மட்டுமல்ல, நகர்ப்புற மக்களும் நாள் தோறும் தரிசித்து செல்கின்றனர்.

x