கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்


கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சோமகமலாம்பிகா உடனுறை பாணபுரீஸ்வரர்.

கும்பகோணம்: கும்பகோணம் பாணாதுறையில் சோமகலாம்பிகை உடனுறை பாணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா, நிகழாண்டு மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, பக்தர்கள் மற்றும் பெண்கள் திரளானோர் சீர்வரிசைப் பொருட்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்று, பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

இதையடுத்து, இன்று (மே 21) மாலை 6 மணிக்கு கட்டுத் தேர் தேரோட்டமும், நாளை (மே 22) பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் காவிரி பகவத் படித்துறையில் வைகாசி விசாக தீர்த்தவாரி ஆகியனவும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பாணபுரீஸ்வரர் கைங்கர்யா சபாவினர் செய்து வருகின்றனர்.

x