பெருமாளுக்கு பக்கத்தில் நின்றாடும் சிவபெருமான்


திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயில்

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக உயரமான சிகரங்களுள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அகத்தியர்முடி எனப்படும் பொதிகை மலையும், மகேந்திரகிரியும் முக்கியமானவை.

ராமாயணத்தில் சுந்தர காண்டம் என்பது அனுமனின் புகழைப் பாடும் பகுதியாகும். இந்த சுந்தர காண்டத்தில் மகேந்திரகிரியின் வரலாறு விரிவாக கூறப்பட்டிருக்கிறது. அதனைப் பார்ப்போம்.

சீதாதேவியைத் தேடி தெற்கு நோக்கி பயணிக்கும் ஸ்ரீ ராமபிரான், மைசூரு அருகே சுக்கிரீவனையும், அனுமனையும் சந்திக்கிறார். ராவணனால் தூக்கிச் செல்லப்படும்போது, புஷ்பக விமானத்தில் இருந்து சீதாதேவி கீழே வீசிய நகைகளை ஸ்ரீ ராமபிரானிடம், அனுமனும், சுக்கிரீவனும் காண்பித்தார்கள். எனவே சீதாதேவியைத் தேடி நான்கு திசைகளிலும் வானர வீரர்கள் புறப்பட்டார்கள்.

அவர்களில் ஜாம்பவான் தலைமையில், அனுமன், அங்கதன் ஆகியோர் தெற்கு நோக்கி வந்தார்கள்.

இவர்கள் பொதிகை மலையில் வாழ்ந்து வந்த அகத்திய முனிவரை சந்திக்கிறார்கள். அவரது வழிகாட்டுதலின்படி மேலும் தெற்கு நோக்கி பயணித்து மகேந்திரிகிரி எனப்படும் உயரமான சிகரத்தை அடைந்தார்கள்.

திருக்குறுங்குடி (மேற்கு தொடர்ச்சி மலை) திருமலைநம்பி கோவில்

இச்சிகரத்தில் மகேந்திரகிரி நாதர் என்ற பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயில் இப்போது இல்லை. ஆனால், சிவபெருமானின் திருவடித் தடங்கள் மட்டும் அங்கு இருக்கின்றன. அங்கு இவர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் அனுமனின் புகழை ஜாம்பவான் சொல்லச் சொல்ல, அனுமன் முதன் முதலாக இங்குதான் விஸ்வரூபம் எடுத்தார். வானம் அளவுக்கு அனுமனின் உருவம் வளர்ந்தது. அவரது எடையைத் தாங்க முடியாமல் மகேந்திரகிரி சிகரம் இரண்டாகப் பிளந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை / மகேந்திரகிரி

அங்கிருந்து அனுமன் கிழக்கு நோக்கி தாவிப் பறந்தார். இலங்கையை அடைந்து சீதாதேவியை சந்தித்தார். இலங்கைக்கு தீவைத்து விட்டு மீண்டும் மகேந்திரகிரியையே அடைந்தார். அதுவரை மகேந்திரகிரியிலேயே அனுமனுக்காக காத்துக்கொண்டிருந்த ஜாம்பவான் உள்ளிட்டோர் அனுமன் பறந்துவருவதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள்.

இவை அத்தனை சம்பவங்களும் சுந்தரகாண்டத்தில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த சிகரத்தில் இருந்து இப்போது பார்த்தாலும் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் என மூன்று கடல்களையும் பார்க்க முடியும். மகேந்திரகிரியில் உள்ள மகேந்திரகிரி நாதனை மாணிக்கவாசக பெருமான் மனமுருக பாடியிருக்கிறார். அங்குள்ள சிவன் பாதம், தாயார் பாதம் ஆகிய தலங்களுக்கு திருக்குறுங்குடி நம்பி மலை வழியாக பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் அவை அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, நம்பி மலைக்கு மேல் செல்ல யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயில்

திருக்குறுங்குடி நகருக்குள் 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு பெருமாள் சன்னதிக்கு அருகிலேயே வடபுறம், ‘பக்கம் நின்றாடுவார்’ சன்னதி என்ற பெயரில் மகேந்திரகிரி நாதருக்கு கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிவத்தலங்களிலும் பெருமாளுக்கு கோயில் அமைந்திருப்பது வழக்கம். ஆனால், பெருமாள் கோயிலுக்குள் சிவபெருமானுக்கு சன்னதி அமைந்திருப்பது திருக்குறுங்குடியில் மட்டுமே.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமாள் கோயில்

அழகிய நம்பிராயர் பெருமாள் சன்னதியில் நாள்தோறும் இரவில் அர்த்தசாமப் பூஜையின் போது, அங்குள்ள அர்ச்சகரைப் பார்த்து, ‘பக்கம் நின்றாடுவாருக்கு குறையேதும் இல்லையே?” என்று திருக்குறுங்குடி எம்பெருமானார் ஜீயர் சுவாமி கேட்பார்.

அதற்கு அர்ச்சகர், ‘குறையேதும் இல்லை சுவாமி’ என்று பதிலளிப்பார்.

அதாவது, ‘பெருமாளுக்கு நைவேத்தியங்கள் படைக்கப்பட்டது போல், அருகே வீற்றிருக்கும் மகேந்திரிகிரி நாதருக்கும் படைக்கப்பட்டனவா?’ என்று ஜீயர் சுவாமி கேட்கிறார்.

‘அனைத்தும் சரிவர படைக்கப்பட்டன’ என்று அர்ச்சகர் பதில் அளிக்கிறார். இந்த வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது.

அழகிய நம்பிராயர் சன்னதிக்கு அருகே, மகேந்திரகிரி நாதருக்கு சமீபத்தில் புதிதாக கோயில் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவுற்றுள்ளன. மகாகும்பாபிஷேகமும் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

x