ஆதிசேஷன் ஒருமுறை தனக்கு சாத்வீக குணம் வேண்டி, எம்பெருமானின் அடிதொழுதான். பெருமாளின் ஆணைப்படி தனது சுயரூபத்தை சுருக்கிக்கொண்டு பூமியில் ஆதிசேஷன் வெளிப்பட்ட இடம் சத்தியகிரி எனப்படும் திருமெய்யம். அங்குள்ள ஆற்றங்கரையில் ஆதிசேஷன் தவமிருந்ததால் அந்த ஆற்றுக்கு ஸர்ப்ப நதி என்றும் பாம்பாறு என்றும் பெயர்.
புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் திருமெய்யம் இருக்கிறது. இதன் தற்போதைய பெயர் திருமயம். ஆதிசேஷனின் தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு ஹயக்ரீவ வடிவத்தில் (குதிரைமுகம் கொண்ட அவதாரம்) காட்சிகொடுத்தார்.
உடனே ஆதிசேஷன் தனது உடலால் ஆசனம் செய்து, 5 தலைகளால் பாத்தியம், அர்க்கியம், ஆசமனீயம் முதலியன கொடுத்து, தன் சிரங்களாகிய புஷ்பங்களால் பூஜித்து, வாசம் மிகுந்த வாய்க்காற்றினால் தூபம் கொடுத்து, தன் சிரத்தில் உள்ள ரத்தினங்களால் தீபாராதனை செய்து, நாக்குகளால் ஆலவட்டம் வீசி, படங்களால் குடைபிடித்து, மானசீகமாக அன்ன நிவேதனம் செய்து ஆராதித்தான்.
இதனால் மிக மகிழ்ந்த மகாவிஷ்ணு ஆதிசேஷனுக்கு ஸத்வகுணத்தை அளித்து, அவனது கோர குணத்தை மாற்றியது மட்டுமன்றி, “இன்னும் வேறு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
அதற்கு ஆதிசேஷன், “திருப்பாற்கடலில் என் மீது சயனித்துள்ளவாறு, இங்கும் சயனித்துக் காட்சியருள வேண்டும்” என்று வேண்டினான். அப்படியே ஆதிசேஷன் மீது சயனக்கோலத்தில் மூலவர் சத்யகிரிநாதன், சத்யமூர்த்தி என்ற பெயர்களுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
உற்சவர்: மெய்யப்பன்/ ராஜ கோபாலன். தாயார்: உஜ்ஜீவனத் தாயார் அல்லது உய்யவந்த நாச்சியார் என்பதும் திருநாமம்.
தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் குடவரைக் கோவிலாக கட்டப்பட்டது. இங்கு ஆதிசேஷன் மீது சயனித்துள்ள பெருமாள், ஸ்ரீரங்கநாதனை விட மிகவும் நீளமானவர். இதற்கு அருகில் உள்ள சுவற்றில் பிரம்மன் முதலிய சகல தேவர்களும் எழுந்தருளியுள்ளனர்.
ஆதிசேடன் இத்தலத்தைப் பாதுகாப்பதாக ஐதீகம். இவன் பாதுகாப்பிலிருந்த பெருமானை ஒரு முறை அசுரர்கள் திருட்டுத்தனமாய் தூக்க வந்ததாகவும், ஆதிசேஷன் விஷக் காற்றைவிட்டு அந்த அசுரர்களை அழித்ததாகவும் வரலாறு. இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில், இங்குள்ள ஆதிசேஷன் வாயிலிருந்து விஷ ஜுவாலைகள் செல்வது போன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும்.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம் இது. மெய்யமென்னும் தடவரை மேல் கிடந்தானையென்றும், திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை என்றும், திருமெய்ய மலையாளா என்றும், மெய்யம் அமர்ந்த பெருமாளை என்றும், மெய்யமணாளர் என்றும் இப்பெருமாளைச் சொல்லிச் மகிழ்கிறார் திருமங்கையாழ்வார். வைகாசி பிரம்மோற்சவம் இங்கு சிறப்பு வாயந்தது.