கடிகைக்கு பறந்த காஞ்சி வரதர்!


சோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில்

“மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்

தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே” - என்று சுவாமி திருமங்கையாழ்வாரால் (பெரிய திருமொழி 8-9-4) பாடப்பட்ட திருத்தலம் திருக்கடிகை.

சோளசிம்மபுரம், கடிகாசலம் என புராணங்களில் அழைக்கப்படும் இத்தலத்தின் தற்போதைய பெயர் சோளிங்கர். அரக்கோணத்தில் இருந்து சுமார் 20 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மலை மீது ஸ்ரீ யோக நரசிம்மர் கோயில் கொண்டுள்ளார். இவருக்கு அக்காரக்கனி என்றும் பெயர். தனிக்கோயிலில் அம்ருதவல்லித் தாயார் கோயில் கொண்டுள்ளார்.

சுவாமி தொட்டாச்சார்யாருக்கு கருட வாகனத்தில் அருளும் பெருமாள்

இக்கோயிலில் சுவாமி தொட்டாச்சார்யார் என்பவர் ஸ்ரீ யோக நரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். ஆண்டுதோறும் வைகாசி மாதம் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளை தரிசிப்பது இவரது வழக்கம். வயது முதிர்வு காரணமாக இவரால் ஒருமுறை பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. காஞ்சிபுரத்தில் வைகாசி திருவிழாவின் மூன்றாம் நாள் கருட சேவை மிகவும் பிரசித்தமானது. ஆயிரக்கணக்கானோர் குவிந்துவிடுவார்கள். வரதராஜனைக் காண முடியாத ஏக்கத்தால் தவித்த சுவாமி தொட்டாச்சார்யார் சோளிங்கரில் உள்ள தக்கான் தெப்பக்குளத்தின் கரையில் இருந்தபடியே ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில்

அதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். அப்போது கோயில் குடைவரை வாயில் கதவை மூடி, மீண்டும் திறந்து கருடவாகனத்தில் அமர்ந்துள்ள வரதராஜருக்கு தீபாராதனை நடத்துவது வழக்கம். சோளிங்கரில் தொட்டாச்சார்யர் ஐந்து ஸ்லோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கருட சேவை

கருட சேவையில் வீற்றிருந்த பெருமாள், கதவு திறந்ததும் தன்னைக் குடைகளால் ஒரு நிமிடம் மறைக்குமாறு அருகில் இருந்த அர்ச்சகரிடம் கூறினார். அர்ச்சகர் அவ்வாறு செய்ததும், அந்த ஒரு நிமிடத்தில் அப்படியே கருடனுடன் சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது சுவாமி தொட்டாச்சார்யார் சேவை என்று காஞ்சியிலும், சோளிங்கரிலும் வழங்கப்படுகிறது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கருட சேவை

காஞ்சிபுரத்தில் வைகாசி கருட சேவையின் போது பெருமாளை குடைகளால் மறைத்து, உடனே விலக்குவார்கள். அதே நாளில் அதே நேரத்தில் சோளிங்கரிலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி மாத கருடசேவை உற்சவம் நடக்கும். மேலும், சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் கருட சேவையிலேயே காட்சி தருகிறார். தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும், நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும், மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதை, கருடன் தன் கையில் உள்ள ஞான முத்திரையால் அறிவிக்கிறார்.

சுவாமி தொட்டாச்சார்யாரின் வம்சத்தவர் இப்போதும் சோளிங்கரில் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.

சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை

x