ஸ்ரீ ரங்கம் கோவில் கருவறையில் தொட்டில் கட்டி வளர்ந்த குழந்தைகள்!


திருச்சி ஸ்ரீ ரங்கம் கோவில்

காஞ்சிபுரம் அருகே உள்ள ஊர் கூரம். தற்போது கிராமமாக இருக்கும் கூரம், 9-ம் நூற்றாண்டில் கூரத்திருநாடு என்ற சிற்றரசுக்கு தலைநகரமாக விளங்கியது. இதன் மன்னராக விளங்கியவர் கூரத்தாழ்வான். இவரது மனைவி கூரத்து ஆண்டாள்.

இவர்கள் இருவரும் தங்கள் அரண்மனையில் அடியார்களுக்கு உணவு வழங்குவதை இடைவிடாமல் செய்து வந்தனர். இரவில் அனைவரும் உண்டு முடித்த பின், அரண்மனை மணி ஒலிப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் - கூரம் ஸ்ரீ கூரத்தாழ்வார் சந்நிதி

காஞ்சிபுரத்தில் குடியிருக்கும் பெருந்தேவி தாயார் ஒருநாள் இந்த மணி ஓசையைக் கேட்டார். தனது நாதனாகிய ஸ்ரீ வரதனிடம், இதுபற்றி வினவினார்.

“தேவி! இது நம்முடைய அடியாராகிய கூரத்தாழ்வானின் அரண்மனை மணி ஓசை” என்று ஸ்ரீவரதராஜ பெருமாள் பதிலுரைத்தார்.

இக்கோயிலில் கைங்கர்யப் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கச்சி நம்பி இதனைக் கேட்டு, கூரத்தாழ்வானிடம் இத்தகவலைக் கூறினார்.

உலகத்துக்கெல்லாம் படியளக்கும் பெருந்தேவித் தாயார் வியக்கும் அளவுக்கு நமது அரண்மனை மணியோசை இருக்கலாமா? என்று எண்ணி, அத்தனை செல்வங்களையும் கைவிட்டார் கூரத்தாழ்வான். தனது மனைவி கூரத்து ஆண்டாளுடன் காஞ்சிபுரம் வந்தார். அங்கு ஸ்ரீ ராமானுஜரை அடிபணிந்து இருவரும் அவரது சீடர்களானார்கள்.

பின்னர் இருவரும் ஸ்ரீரங்கம் புறப்பட்டனர். அப்படிச் செல்லும் வழியில் பயந்துகொண்டே வந்தாள் ஆண்டாள்.

“நம்மிடம்தான் எதுவுமே இல்லையே! நீ ஏன் பயந்து கொண்டே வருகிறாய்?” என்று மனைவியிடம் கேட்டார்.

“சுவாமி தாங்கள் தினமும் உணவை வைத்து உண்ணும் தங்க வட்டிலை மட்டும் என்னோடு எடுத்து வந்தேன்” என்று ஆண்டாள் பதில் கூறினாள்.

அந்த தங்கவட்டிலை வாங்கி தூர எறிந்தார் கூரத்தாழ்வான். “இப்போது பயமின்றி வா” என்று கூறி நடந்தார்.

ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ பராசர பட்டர்

அரசராக விளங்கிய கூரத்தாழ்வான் ஸ்ரீரங்கத்தில் பிச்சை எடுத்தார். அவர் பெற்று வந்த தானியத்தைக் கொண்டு இருவரும் வாழ்ந்தனர். ஒருநாள் அடைமழை பெய்ததால் பிச்சை எடுக்க செல்ல முடியவில்லை. அன்று முழுவதும் இருவரும் பட்டினி கிடந்தார்கள். இரவில் ஸ்ரீரங்க ரெங்கநாத பெருமாள் கோவிலில் அர்த்தசாமப் பூஜை தளிகைக்கான மணியோசை ஒலித்தது.

இதனைக் கேட்ட கூரத்து ஆண்டாள், “பெருமாளே! உமது அடியாராகிய எனது கணவர் பட்டினி கிடக்கிறார். ஆனால் நீர் நைவேத்தியம் கொள்ளலாமோ?” என்று எண்ணினாள்.

இது ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு கேட்டது. கோவில் கொத்துக்காரர்களையும், பரிசாரகர்களையும் பெருமாள் அழைத்தார். நம்முடைய பிரசாதங்களை கூரத்தாழ்வான் இல்லத்தில் கொடுத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.

திடீரென தங்கள் வீட்டு வாசலில் மேளமும், திருச்சின்னமும் ஒலிப்பதைக் கேட்டு கூரத்தாழ்வானும், ஆண்டாளும் வெளியே வந்தனர். கோவில் பணியாளர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். பெருமாள் ஆணையிட்டதாகக் கூறி கோவில் பிரசாதங்களை அவர்கள் கொடுத்தனர்.

மூதாட்டியான ஆண்டாளுக்கு பெருமாள் பிரசாதங்களை உண்டதன் பயனாக, வைகாசி மாதம் அனுஷ நட்சத்திர நாளில் இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு பராசர பட்டர், வேதவியாச பட்டர் என ஸ்ரீ ராமானுஜர் பெயர் சூட்டினார். இவ்விரு குழந்தைகளும், ஸ்ரீரங்கம் பெரிய கோவில் கருவறை வாயிலில் உள்ள திருமணத் தூண்களில் தான் தொட்டில் கட்டி வளர்ந்தனர். ராமானுஜரின் சீடராகிய சுவாமி எம்பார் இவர்களின் குருவாக இருந்தார்.

பிற்காலத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு அடுத்த வைணவ ஆசார்யராக ஸ்ரீ பராசர பட்டர் விளங்கினார். விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு விளக்க உரை உட்பட இவர் எழுதிய நூல்கள் ஏராளம். கார்த்திகை மாதம் வரும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேத வியாச பட்டர் சந்ததியினருக்கு ஸ்ரீரங்கம் கோவிலின் பிரம்மரத மரியாதை அளிக்கப்படுகிறது.

ஸ்ரீ பராசர பட்டர் திருமாளிகை, ஸ்ரீரங்கம்

x