திருவேங்கடம், திருவரங்கம் போன்று எண்ணற்ற பெருஞ்சிறப்புக்கள் கொண்ட திவ்ய தேசம் காஞ்சிபுரம். வைணவத் தலங்களுக்கு தீபம் போலவும், தொண்டை நாட்டுத் தலங்களுக்கு
திலகம் போன்றும் காஞ்சிபுரம் திகழ்கின்றது. இவ்வூர் விஷ்ணு காஞ்சி, அத்திகிரி, திருக்கச்சி எனவும் அழைக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் பிரம்மதேவன் நடத்திய யாகத்தின் நிறைவில் பேரொளி பொருந்திய புண்ணியகோடி விமானம் தோன்றியது. அதில் சங்கு சக்ர கதாபாணியாக எம்பெருமான் ஸ்ரீ மந் நாராயணன் தோன்றினார். கேட்கும் வரங்களை எல்லாம் அவர் அளித்ததால் வரதர் என்ற பெயர் ஏற்பட்டது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திர நாளில் யாகத்தில் இருந்து ஸ்ரீ வரதர் தோன்றினார்.
தேவலோகத்தில் உள்ள ஐராவதம் என்ற யானையே மலைவடிவங்கொண்டு எம்பெருமானைத் தாங்கி நின்றது. அதனால் இதற்கு அத்திகிரி என்ற பெயர் ஏற்பட்டது. ஐராவதம் வெள்ளை நிற யானை என்பதால் ஸ்வேதகிரி என்றழைக்கப்பட்டு வேதகிரி என மருவியது.
க. என்றால் பிரம்மன் என்றும், அஞ்சிரம் என்றால் பூஜிக்கப்படல் என்பதாலும், கஞ்சிரம் என்றாகி, கஞ்சிதபுரியாகி, காலப்போக்கில் மருவி காஞ்சிபுரம் என இத்தலத்துக்கு பெயர் உண்டாயிற்று.
வாரணகிரி, அத்திகிரி என்ற சிறிய மாடி போன்ற மலைகளாலானது இத்தலம். வாரணகிரி என்ற முதல் மாடியில் நரசிம்மன் சன்னதி உள்ளது. இங்கு அழகிய சிங்கர் (நரசிம்ம அவதார திருக்கோலத்தில்) அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஹரித்ரா தேவியே இங்கு பிராட்டியாக எழுந்தருளியுள்ளார்.
2-வது மாடியான மேல்மாடி வரதராஜப் பெருமாள் சன்னதியான அத்திகிரியாகும். தற்போதுள்ள இவ்வமைப்பு பிற்காலத்தில் ஒரு பக்தரால் கட்டப்பட்டதாகும்.
மூலவர்: ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறார். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
தாயார்: பெருந்தேவித் தாயார் தனிக்கோவிலில் வீற்றிருக்கிறார்.
தீர்த்தம்: வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், வராஹ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்,
விமானம்: புண்யகோடி விமானம்.
இங்குள்ள அனந்தஸரஸ் குளத்துக்குள் அத்திவரதர் வாசம் செய்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவரை வெளியே எடுத்து பக்தர்கள் காட்சிக்கு வைக்கின்றனர். ஸ்ரீ ராமானுஜர் உள்ளிட்ட ஏராளமான வைணவ ஆசார்யர்களின் முக்கிய இடம்பெற்றது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில். இங்கு நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவத்தை, ‘வையம் போற்றும் வைகாசி திருவிழா’ என கொண்டாடுவர்.