அரசாண்டவர் ஆசார்யனாகிய அதிசயம்


மதுரை கொந்தகையில் கையில் செங்கோலுடன் ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை.

மதுரை அருகே இருக்கிறது கொந்தகை. 13-ம் நூற்றாண்டில் இங்கு அவதரித்தவர் திருமலை ஆழ்வார். இவர் பாண்டிய மன்னனின் மந்திரியாக பணிபுரிந்தார்.

அச்சமயத்தில் அன்னியர்கள் படையெடுத்து வந்தபோது காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், சமயபுரம், மதுரை போன்று முக்கிய கோவில் நகரங்கள் எல்லாம் கடுமையாக அழிவுபட்டன. ஏராளமான செல்வம் கொள்ளைபோனது. பல ஆயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டன.

ஸ்ரீரங்கத்தில் சுவாமி நம்பெருமாள் அங்கிருந்து மதுரை ஆனைமலை அடிவாரத்தில் உள்ள குகையில் வைத்து பத்திரமாக பாதுகாக்கப்பட்டார். இந்த சமயத்தில்தான் மதுரை பாண்டிய மன்னனின் மந்திரியாக திருமலை ஆழ்வார் பணிபுரிந்தார். அன்னியர்களுடனான போரில் மன்னர் கொல்லப்பட்டார். இளவரசரோ சிறுவனாக இருந்தார். இதனால், மந்திரியாகிய திருமலை ஆழ்வாரே அரசாட்சியை முழுமையாக கவனித்து வந்தார். போரின் அழிவுகளில் இருந்து நாட்டை மீட்டு, மக்களைக் காக்க வேண்டிய கடமையும், சிறுவனாக இருந்த இளவரசருக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது.

ஆனால் எம்பெருமானின் திருவுள்ளமோ வேறுவிதமாக இருந்தது. அரசாட்சியில் இருந்த திருமலை ஆழ்வாரைத் திருத்தி வைணவ ஆசார்யராக்க வேண்டும் என்று, ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர் விரும்பினார். இதற்காக ஸ்ரீ கூரகுலோத்தம தாசர் என்பவரை நியமித்தார்.

திருமலை ஆழ்வார் கொந்தகையில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில் ஒருநாள் ஸ்ரீ கூரகுலோத்தம தாசர் நின்று கொண்டார். அவரது பல்லக்கு அருகில் வந்ததும்,

மதுரை கொந்தகையில் கையில் செங்கோலுடன் ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை.

“பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்,

இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை, உயிர் அளிப்பான்-

எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா!

மெய்ந் நின்று கேட்டருளாய், அடியேன் செய்யும் விண்ணப்பமே”

- என்ற ஸ்ரீ நம்மாழ்வாரின் பாசுரத்தைச் சத்தமாக படித்தார்.

தமிழில் புலமை வாய்ந்த திருமலை ஆழ்வார், இந்தப் பாடலைக்கேட்டதும் பல்லக்கை நிறுத்தினார். இவரை அருகில் அழைத்து அதற்கு விளக்கம் கேட்டார்.

“சீடனாக வந்து கேட்டால் கற்றுத் தருகிறேன்” என்றார் கூரகுலோத்தம தாசர்.

அப்படியே சீடனாக வந்து அடிபணிந்தார் திருமலை ஆழ்வார். வைணவ சம்பிரதாய விஷயங்களை எல்லாம் அவருக்கு கற்றுக் கொடுத்தார். அத்துடன் விளாஞ்சோலைப் பிள்ளை, திருப்புட்குழி ஜீயர் போன்றவர்களிடமும் சென்று வேண்டிய பாடங்கள் கற்றார்.

ஸ்ரீ நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியின் மீது மிகுந்த அபிமானம் கொண்டார். மதுரையில் தமது அரசுப்பணிகளை எல்லாம் இளவரசரிடமும், மகாராணியிடமும் ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார்திருநகரிக்கு வந்தார். அப்போது முதல் அவருக்கு ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை என்ற திருநாமம் ஏற்பட்டது. அங்கேயே மடம் அமைத்து கடைசி வரையிலும் தங்கினார்.

திருமலை ஆழ்வாராகிய திருவாய்மொழிப்பிள்ளை வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். இவரது வழித்தோன்றல்கள் இன்றைக்கும் ஆழ்வார்திருநகரியில் உள்ளனர். மதுரை அருகே கொந்தகையில் இவர் செங்கோலுடன் வீற்றிருக்கும் விக்ரகத்தை இப்போதும் தரிசிக்கலாம்.

x