வேதவியாச மகரிஷி ஸ்ரீமத் பாகவதத்தை அருளிச்செய்தவர். வேதங்களை நான்காகத் தொகுத்தவர். 18 புராணங்கள், 18 உப புராணங்கள், 5-வது வேதம் எனப்படும் 1,25,000 ஸ்லோகங்கள் கொண்ட மகாபாரதம், ‘வேதம் சொல்வது இதுதான்’ என்பதை நிலைநாட்டக்கூடிய பிரம்ம சூத்திரம்... என பல காவியங்களை எழுதியவர் வேதவியாச மகரிஷி.
உலகத்தில் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என இந்து புராணங்கள் கூறும் ஏழு பேரில், தம் எழுத்துக்களால் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர் வேதவியாச மகரிஷி.
மகாபாரதத்தை எழுதி முடித்த வேளையில் மகாமுனிவராகிய வேதவியாசருக்கு திடீரென மன நிம்மதியின்மை ஏற்பட்டது. மனதில் அமைதி இல்லாமல், சஞ்சலத்தோடு தவித்தார்.
இதற்கான காரணத்தை அறிய முடியாமல் தேவ ரிஷியான ஸ்ரீ நாரதரைத் தேடிச் சென்றார்.
பார்த்த மறு விநாடியே வேத வியாசரின் மன வாட்டத்துக்கு என்ன காரணம் என்பதை ஸ்ரீ நாரதர் கண்டு கொண்டார்.
“வேதவியாசரே உமது படைப்புக்களில் ஸ்ரீ மந் நாராயணனின் பரி பூரணத்வத்தை வெளிப்படுத்தாமல் விட்டுவிட்டீர். மேலும் உலக மக்களை பிறவிப் பெருந்துயரில் இருந்து விடுவிக்கக் கூடிய சரணாகதி தர்மத்தைப் பற்றியும் கூறத் தவறிவீட்டீர் இதனாலேயே உமது மனதில் நிம்மதியின்மை ஏற்பட்டிருக்கிறது” என்று ஸ்ரீ நாரதர் தெளிவுபடுத்தினார்.
இதனைக் கேட்ட பின்புதான், 12 ஸ்கந்தங்களில், 18,000 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீ வேதவியாசர் அருளிச்செய்தார். அதில் முடிவாக, 11-வது ஸ்கந்தம், 31-வது அத்தியாயம், 13-ம் வசனம் முதல் 17-ம் வசனம் வரையான 5 ஸ்லோகங்களில், பாகவதத்தை எதற்காக இயற்றினோம் என்பதை ஸ்ரீ வியாசர் புலப்படுத்துகிறார்.
அத்துடன் கலியுகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் ஆழ்வார்கள் அவதரித்து, சரணாகதி மார்க்கத்தை வெளிப்படுத்துவார்கள் என்றும் ஸ்ரீ வேதவியாசர் தமது ஸ்ரீ மத் பாகவதத்தில் கூறியிருக்கிறார்.
அவர் கூறியபடியே, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ நம்மாழ்வாரும், திருக்கோளூரில் ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் அவதரித்தனர். வைகாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர நாளில் ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
வைணவத்துக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் ஸ்ரீ நம்மாழ்வார் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை தமிழில் எழுதிய பெருமை ஸ்ரீ நம்மாழ்வாரையே சாரும்.
ஸ்ரீ நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம் என்பது ரிக் வேதத்தின் சாரம் என்றும், திருவாசிரியம் என்பது யஜூர் வேதத்தின் சாரம் என்றும், பெரிய திருவந்தாதி என்பது அதர்வண வேதத்தின் சாரம் என்றும், திருவாய்மொழி என்பது சாம வேத சாரம் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
“கண்டுகொண்டு என்னை காரி மாறப்பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய வியம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே”
என்று ஸ்ரீ நம்மாழ்வாரைப் பற்றி ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் புகழ்கிறார்.
காரி மாறன் என்பதும், சடகோபன் என்பதும் ஸ்ரீ நம்மாழ்வாரின் பெயர்களே. நம்மாழ்வாரின் புகழைக் கூறும் சடகோபர் அந்தாதி என்னும் நூல் கம்பர் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
(ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகம் 2.6.2023)