முருகன் அவதரித்த வைகாசி விசாகம்


வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான்

முருகப்பெருமான் அவதரித்த திருநாள் வைகாசி விசாகம். முருகப்பெருமானுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ மத் அருணகிரிநாதர் தாம் படைத்த திருப்புகழில், அழகுலாவு விசாகன், இன்சொல் விசாகன், சித்த விசாகன். வீறு கொண்ட விசாகன் என்று அழைக்கிறார். தைப்பூசம், ஆடிக்கிருத்திகை, தை கிருத்திகை, கந்த சஷ்டி ஆகி விழாக்களைப் போன்று வைகாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிய விசாக நட்சத்திர விழாவும் மிகவும் உயர்ந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் உலகெங்கும் உள்ள முருகன் கோயில்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் இவ்விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம்

அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவும், கடைசி நாள் மொட்டையரசு உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது.

தினமும் மாலை 6 மணிக்கு வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த நிகழ்ச்சி நடக்கிறது. வைகாசி விசாகத்தன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசா கொறடு மண்டபத்துக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமான் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் பாலாபிஷேகம் நடைபெறும். விதவிதமான காவடிகள் எடுத்து வந்தும் அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். முக்கிய நிகழ்ச்சியான மொட்டையரசு உற்சவம் விசாகத்துக்கு மறுநாள் நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாக உள்ளது. இங்கு வைகாசி விசாகம் நாளில் முருகப்பெருமானை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வணங்கியதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் விசாகத்தன்று குவிவார்கள். அன்று காலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்படும். மூலவருக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படும். திருச்செந்தூர் வசந்த மண்டபத்தில் உள்ள நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை விடுவார்கள். முருகனின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்ததால் மீன்களாக இருந்து சாப விமோசனம் பெற்ற முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக, ஆறு முனிவர்களின் விக்ரகங்களை வைத்து முருகன் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

பழநி முருகன் கோயில்

பழநி முருகன் கோவில்

மூன்றாம் படைவீடான பழநியில் வைகாசி விசாகத் திருவிழா நாட்களில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கிலும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, மயில் மற்றும் தங்க மயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் முத்துக்குமாரசுவாமியும், வள்ளி-தெய்வானையும் வீதியுலா வருவர். விசாகத்துக்கு முதல் நாள் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும். வைகாசி விசாக தினத்தன்று பெரியநாயகி அம்மன் கோவிலில், முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று காலை 9 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தருள்வார். மாலையில் தேரோட்டம் நடைபெறுகிறது. இரவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்

அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு நடைதிறக்கப்படும். உற்சவர் சண்முகப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும்.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாக போற்றப்படும் திருத்தலமாகும். வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு மூலவருக்கு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர் தங்க கவச அலங்காரத்தில் மூலவர் காட்சியளிப்பார். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்தி முருகப்பெருமானை வழிபடுவர்.

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

பழமுதிர்ச்சோலை

மதுரை மாவட்டம் பழமுதிர்ச்சோலை ஆறாவது அறுபடை வீடாக கருதப்படுகிறது. அழகர் மலை மீது அமைந்துள்ள இக்கோவிலில் வைகாசி விசாகத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக குவிவர். பல்வேறு காவடிகள் எடுத்தும், பால்குடம் சுமந்தும் வந்து வழிபடுவர்.

x