குமரக்கோட்டம் என்றும், செனாதீச்வரம் என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில், கந்தப் பெருமானின் திருத்தலங்களுள் பல சிறப்புகளைக் கொண்ட கோயில் ஆகும். கந்த புராணம் அரங்கேறிய தலம் என்பதால், இத்தலம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் போற்றிப் புகழப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிப் புராணம் இத்தலத்தைப் பற்றி தனிப்படலத்தில் உரைக்கிறது.
தல வரலாறு
ஒருசமயம், பிரணவத்தின் பொருளுக்கு விளக்கம் அளிக்குமாறு, பிரம்மதேவரைக் கேட்கிறார் முருகப் பெருமான். பிரம்மதேவர் அதற்கு விடை தெரியாமல் இருப்பதைக் கண்ட முருகப் பெருமான், அவரை சிறையிலிட்டு, அவர் மேற்கொள்ளும் படைப்புத் தொழிலை தானே செய்து வந்தார். இதனால் முருகப் பெருமான் உத்திராட்ச மாலை அணிந்து, கையில் கமண்டலத்துடன் படைப்புக் கோல மூர்த்தியாக காட்சி அருள்கிறார்.
நந்திதேவரை முருகப் பெருமானிடம் அனுப்பி, பிரம்மதேவரை விடுவிக்குமாறு சிவபெருமான் பணிக்கிறார். ஈசன் கட்டளையை நிராகரித்து, நந்தி தேவரை திருப்பி அனுப்புகிறார் முருகப் பெருமான். பிறகு ஈசனே நேரில் சென்று தகுந்த முறையில் முருகப் பெருமானுக்கு எடுத்துரைத்து, பிரம்மதேவரை விடுவிக்கச் செய்கிறார். இதைத் தொடர்ந்து, முன்னர் தந்தையின் கட்டளையை மீறியதற்காக பிராயச்சித்தம் தேடும் நோக்கத்தோடு, முருகப் பெருமான் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே தேவசேனாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
முருகப் பெருமான் மான் தோல் தரித்து, கழுத்தில் உத்திராட்ச மாலை, இடுப்பில் தருப்பை அரைநாண், கரங்களில் கமண்டலம் கொண்டு இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். தம்மை வணங்குவோருக்கு இன்ப முக்தி அருளும் பெருமானாக குமரக் கோட்ட முருகப் பெருமான் விளங்குகிறார். தேவசேனாதீஸ்வரரின் மூலஸ்தானத்து மேல் விமானத்தில் முருகப் பெருமானும், திருமாலும் சிவபெருமானை வணங்குவது போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றன.
மற்றொரு சமயம், பிரளய காலத்தில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பொருட்கள் குறித்து கவலை கொண்ட மார்க்கண்டேய முனிவர், அதுகுறித்து திருமாலிடம் வினவினார். அனைத்தும் தன் வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறினார் திருமால். இதைக் கேட்டதும், தன்னை மார்க்கண்டேய முனிவர் இகழ்ந்ததில் மனம் வருந்திய திருமால், ஈசனை வழிபட்டு அவரருகே கோயில் கொண்டார். ‘என்றும் அன்புடையன்’ என்ற பொருள்படும்படி ‘உருகும் உள்ளத்தான்’ என்ற நாமத்துடன் பெருமாள் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் முருகப் பெருமானின் பள்ளியறைக்கு அருகே தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார். பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் மற்றும் மார்க்கண்டேய முனிவர் காட்சி அருள்கின்றனர்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளதால், சோமாஸ்கந்தர் தரிசனம் கிடைத்ததாக கூறுவது வழக்கம். கோயில் நுழைவாயிலில் விநாயகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
மூலவர் சுப்பிரமணிய சுவாமி இத்தலத்தில் தவம் இயற்றும் பிரம்மச்சாரியாக அருள்பாலிப்பதால், சுவாமிக்கு இடது புறமும், வலது புறமும் வள்ளி, தெய்வயானை தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
அனந்த சுப்பிரமணியர் என்று அழைக்கப்படும் நாக சுப்பிரமணியர் உற்சவமூர்த்தியாக உள்ளார். இவர் வலது கரத்தில் அபயம், இடது கரத்தில் ஊரு முத்திரைகளைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.
நாக சுப்பிரமணியருக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்துக் கொண்டு நிற்கிறது. வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கு மூன்று தலை நாகம் குடைபிடித்துக் கொண்டுள்ளது. இக்கோயிலில் சந்தான கணபதி அருள்பாலிப்பது தனிச்சிறப்பு. நவக்கிரகம் ஒன்றையொன்று பார்த்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. வள்ளலாருக்கு இங்கே தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
கந்த புராணத்தை எழுதிய கச்சியப்பருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பீடம் எதிரே முருகப் பெருமான் தெற்கு நோக்கி காட்சி அருள்கிறார். கந்த புராண அரங்கேற்றம் நடைபெற்ற கல் மண்டபம், இன்று நூலகமாக பராமரிக்கப்படுகிறது.
கந்த புராணம்
கந்த புராணம் அல்லது ஸ்கந்த புராணம் என்பது மகாபுராணங்களில் 13-வது புராணமாகும். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் தமிழில் இந்தப் புராணத்தை எழுதினார்.
வடமொழி கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் மொத்தம் 7 காண்டங்கள் உண்டு. இதில் உபதேச காண்டம் தவிர ஏனைய 6 காண்டங்களின் (உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம்) தமிழ் மொழி பெயர்ப்பே கந்த புராணம் ஆகும். 135 படலங்களையும், 10,345 பாடல்களையும் கொண்ட கந்த புராணம், முருகப் பெருமானின் வரலாற்றை முறையாகவும், முழுமையாகவும் கூறுகிறது.
கந்த புராண அரங்கேற்றம்
காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அர்ச்சகர் காளத்தியப்ப சிவாச்சாரியாரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார் ஆவார். அனைத்து ஆகமங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்த இவர், தினந்தோறும் முருகப் பெருமானை வழிபட்டு வருவதை தனது கடமையாகக் கொண்டிருந்தார்.
ஒருசமயம் கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், அவரை கந்த புராணத்தை தீந்தமிழில் இயற்றும்படி பணித்தார். மேலும், ‘திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்ற முதலடியையும் கச்சியப்பருக்கு எடுத்துக் கொடுத்து அருளினார்.
இதை தன் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பாக்கியமாகக் கருதிய கச்சியப்பர், கந்தப் பெருமான் அருளிய முதலடியைக் கொண்டு, கந்த புராண நிகழ்வுகளை தமிழ்ப் பாடல்களாகப் புனையத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில், தான் அன்றைய தினம் இயற்றிய பாடல்களைத் தொகுத்து, முருகப் பெருமானின் சந்நிதியில் வைத்துச் செல்வார் கச்சியப்பர்.
முருகப் பெருமானும் அவற்றில் சிற்சில திருத்தங்களைப் புரிந்தருள்வார். அதிகாலையில் முருகப் பெருமானை தரிசிக்க அவரது சந்நிதிக்கு வரும் கச்சியப்பர், தன் பாடல்களில் அவர் செய்துள்ள திருத்தங்களை கண்ணுற்று மகிழ்ந்தார்.
இவ்வாறு அனைத்து நிகழ்வுகளையும் பாடல்களாகப் புனைந்த கச்சியப்பர், ஒரு நன்னாளில் குமரக் கோட்டக் கோயிலில், கற்றறிந்த அறிஞர்கள் கூடியிருந்த கல் மண்டபத்தில், ‘திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ எனத் தொடங்கும் விநாயகர் வாழ்த்துப் பாடலுடன் அரங்கேற்றத்தைத் தொடங்கினார்.
‘திகழ் தசக்கரம்’ என்னும் இரு பதங்கள் எவ்விதம் ‘திகட சக்கரம்’ என்று புணரும்? இதுதொடர்பாக இலக்கண விதி கிடையாது என்று அறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். கச்சியப்பர் பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தார். கந்தப் பெருமான் அடியெடுத்துக் கொடுத்த பாடல் வரிக்கு அவரால் எவ்வாறு சான்றுகளைத் தர முடியும்? இதுதொடர்பாக மறுநாள் பதிலளிப்பதாகக் கூறி இல்லம் திரும்பினார்.
அன்றிரவு கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், மறுநாள் தடை நீக்கியருள்வதாக திருவாய் மலர்ந்தார். மறுநாள் அரங்கேற்ற மண்டபம் சென்ற கச்சியப்பரை எதிர்பார்த்து அறிஞர்கள் காத்திருந்தனர். அப்போது முருகப் பெருமான் புலவராகத் தோன்றி, ‘திகட சக்கரம்’ என்று புணர்வதற்கு சான்றாக உள்ள ‘வீர சோழியம்’ என்ற இலக்கண நூலை அனைவருக்கும் காண்பித்தார். அறிஞர்களும் அந்நூலை ஆராய்ந்து, கச்சியப்பரின் கந்த புராண அரங்கேற்றத்துக்கு ஒப்புதல் வழங்கினர்.
அரங்கேற்றத் தடை நீங்கியதும் முருகப் பெருமான், அனைவரும் அறியுமாறு அங்கிருந்து மறைந்தருளினார். புலவராக வந்திருந்து இலக்கணச் சான்று அளித்தது முருகப் பெருமான் என்பதை அனைவரும் உணர்ந்தனர். கச்சியப்பரும் கந்த புராண அரங்கேற்றத்தை இனிதே நிறைவு செய்தார்.
கந்த புராணம் - கம்ப ராமாயணம் ஒப்புமை
கம்ப ராமாயணத்துக்கும் கந்த புராணத்துக்கும் உண்டான ஒற்றுமையை தமிழ்ச் சான்றோர் கூறுவதுண்டு. ஒரே மாதிரியான காப்பிய அமைப்பைப் பெற்ற இவ்விரண்டு படைப்புகளும் பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இரண்டும் ஆறு காண்டங்களைக் கொண்டவை.
கந்தப் புராணத்தின் தலைவன் முருகப் பெருமான். துணைவன் வீரபாகு. பகைவன் சூரபத்மன். படைகள் - பூதகணங்கள். சிறையில் இருந்தவர் - சயந்தன். போருக்குக் காரணமானவர் - அசமுகி.
கம்ப ராமாயணத்தின் தலைவன் ராமபிரான். துணைவன் - இலக்குவன். பகைவன் - ராவணன். படைகள் - குரங்கினங்கள். சிறையில் இருந்தவர் - சீதாபிராட்டி. போருக்குக் காரணமானவர் - சூர்ப்பனகை.
திருவிழாக்கள்
வைகாசி பிரம்மோற்சவம் (11 நாள்), ஐப்பசி கந்த சஷ்டி விழா, கார்த்திகைத் திருவிழா இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசியில் வள்ளி - சுப்பிரமணியர் திருமணம், ஐப்பசியில் தெய்வசேனா - சுப்பிரமணியர் திருமணம் நடைபெறும். கந்த சஷ்டி விழாவில் எண்ணற்ற பக்தர்கள் பங்கேற்று 108 முறை கோயிலை வலம் வந்து வேண்டிக் கொள்வது வழக்கம்.
தீபாவளித் திருநாள் நீங்கலாக ஆண்டு முழுவதும் சுப்பிரமணிய சுவாமிக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. தேன் அபிஷேகமே சுவாமிக்கு பிரியமான அபிஷேகம் என்று கூறப்படுகிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், பரணி, கார்த்திகை, பூச நட்சத்திர தினங்கள், சஷ்டி நாட்களில் இங்கே சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதியுலாவும் உண்டு. நாக ஸ்கந்த வழிபாட்டின்போது பிரார்த்தனை செய்துகொண்டால் திருமணத் தடை, நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நாக ஸ்கந்தருக்கு பாலாபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்கின்றனர்.