ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம்


ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா ஜுலை 29ம் தேதி அன்று தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளல், திருவிளக்கு பூஜை, வெள்ளி ரதத்தில் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 9 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பர்வதவர்த்தினி அம்பாள் கன்னி லக்னத்தில் எழுந்தருளினார்.

தேரோட்டத்தை கோயிலின் இணை ஆணையர் செ.சிவராம்குமார் வடம் பிடித்து துவங்கி வைத்தார். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து இரவு நாயகர் வாசலில் தீபாராதனை முடிந்து பர்வதவர்ததினி அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஆகஸ்ட் 8ம் தேதி அன்று ஆடி தபசுவை முன்னிட்டு காலை 5.55 மணிக்கு மேல் அம்பாள் கமல வாகனத்தில் தபசு மண்டகப்படிக்கு புறப்பாடு நடைபெறும்.

தொடர்ந்து காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ராமநாதசுவாமி கோயில் நடை சாத்தப்படும். மாலை நடை திறந்தவுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஆகஸ்ட் 9 திருக்கல்யாணம், ஆகஸ்ட் 14ம் தேதி கெந்தனமாதன பர்வதம் மண்டபகப்படிக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

x