கேரளத்தையும், தமிழகத்தின் தென்பகுதியையும் உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது களக்காடு. பின்னர் பத்மநாபபுரத்துக்கு தலைநகரம் மாற்றப்பட்டது. பாண்டியர், சோழர்களின் வசமும் இந்நகரம் இருந்ததுண்டு.
இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள களக்காடு நகரத்தின் மையப்பகுதியில் கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் ஒன்பது நிலை கோபுரத்துடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர் வீரமார்த்தாண்டவர்ம மகாராஜா, நாயக்க மன்னர்கள் என பலரும் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
ஒருமுறை அசுரர்களை எதிர்கொள்ள முடியாத தேவர்கள் சிவபெருமானை அடிபணிந்து வேண்டியபோது, அசுரர்களை அழிப்பதாக பெருமான் வாக்களித்தார். சொன்ன வாக்கை நிறைவேற்றும் வகையில் தமது பூதகணங்களுடன் சென்று அசுரர்களை ஒடுக்கினார். இதனால் சத்தியமான வாக்குடையவர் என்ற பொருளில் சத்தியவாகீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் 156 அடி உயரம் கொண்டது. கோபுரத்தின் வெளிச்சுவர் முழுவதும் அழகிய சிற்பங்கள் அமைந்துள்ளன. அதுபோல் கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலும் உட்பகுதியில் ராமாயணம், மகாபாரதம், சிவபுராணம் போன்ற புராண சம்பவங்களை விவரிக்கும் மூலிகை ஓவியங்கள் நூற்றுக்கணக்கில் வரையப்பட்டுள்ளன.
கோயில் மூலஸ்தானத்துக்கு வெளியே உள்ள மணி மண்டபத்தில் அழகிய கற்சிற்பங்களும், இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன.
இக்கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் 24.5.2023 அன்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நடைபெறும். வரும் 31-ம் தேதி பகல் 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு நடராஜர் பச்சை பட்டு உடுத்தி திருவீதியுலா நடைபெறும். மாலை 6 மணிக்கு கங்காளநாதர் திருவீதியுலா நடைபெறும். ஜூன் 1-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 2-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.