பூலோகத்தில் கர்மவினைகளால் பிறவியெடுத்த ஆன்மாக்கள் அனைத்தும், பாவங்கள் தொலைந்து நித்யப் பெருவாழ்வான, தான் வசிக்கும் பரமபதத்தை அடைய வேண்டும் என்பதில் ஸ்ரீ மந் நாராயணன் அயராது பாடுபடுகிறான். அதற்காக பரமபதத்தில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாருக்கு சரணாகதி தத்துவத்தை உரைத்தான். தாயார் அதனை ஸ்ரீ விஸ்வக்ஷேனருக்குச் சொன்னார். ஸ்ரீ விஸ்வக்க்ஷேனர் பூமிக்கு வந்து ஆழ்வார்திருநகரியில் யோகத்தில் இருந்த ஸ்ரீ நம்மாழ்வாருக்குச் சொன்னார்.
18 ஓராண்வழி ஆசார்யர்களைக் கொண்ட ஸ்ரீ வைணவ குருபரம்பரையில் ஸ்ரீ மந் நாராயணன், ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ விஸ்வக்ஷேனர் ஆகிய முதல் மூவரும் பரமபதத்தில் உள்ளனர். நான்காவதாக உள்ள ஸ்ரீ நம்மாழ்வார் தொடங்கி மற்றவர்கள் பூலோகத்தில் அவதரித்தவர்கள். வைகாசி மாதம் விசாகத்தன்று ஆழ்வார்திருநகரியில் ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று(மே-24) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்காலத்தில் திருவழுதி நாடு என அழைக்கப்பட்டன. திருவழுதி நாட்டின் மன்னராக இருந்தவர் காரி மகாராஜா. இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தைச் சேர்ந்த உடையநங்கைக்கும் திருமணமானது. இத்தம்பதியர் குழந்தைப்பேறு வேண்டி திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் பெருமானை வேண்ட, தாமே குழந்தையாக அவதரிப்பதாக நம்பி பெருமான் அருள்பாலித்தார்.
அதன்படியே உடைய நங்கைக்கு துவாபர யுகம் முடிந்து, கலியுகம் பிறந்த 46-வது நாள் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
இங்குள்ள புளியமரத்தடியில் யோகம் மேற்கொண்டு, நான்கு வேதங்களையும் தமிழில் நான்கு பிரபந்தங்களாகப் பாடினார். அவை திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி எனப்படுகின்றன.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதப் பெருமாள் கோயிலில் உள்ள புளியமரத்துக்கு அருகே தனி கொடிமரத்துடன் சுவாமி நம்மாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் மே 24-ம் தேதி தொடங்கியது. கொடியேற்ற விழாவுக்கு ஆழ்வார்திருநகரி ஸ்ரீ எம்பெருமானார் பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமி தலைமை வகித்தார். கோவில் நிர்வாக அதிகாரி அஜீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழா ஜூன் 7-ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் தங்க தோளுக்கினியான் வாகனத்தில் ஆழ்வார் வீதி உலா வருவார். மாலையில் இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு, புன்னை மரவாகனம், தங்க திருப்புளி வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடக்கிறது.
தாமிரபரணி நதிக்கரையில் ஆழ்வார்திருநகரியையும் சேர்த்து நவதிருப்பதி எனப்படும் ஒன்பது திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. இவை ஒன்பது திருத்தலங்களும் சுவாமி நம்மாழ்வாரால் பாடல் பெற்றவை. எனவே, ஆழ்வாரைக் காண இவர்கள் ஒன்பது பெருமாள்களும் வருடத்திற்கு ஒருமுறை ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருள்வர். இவ்விழா வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது.
அன்று காலையில் நவதிருப்பதி கோயில்களில் இருந்து ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் எம்இடர்கடிவான், திருப்புளியங்குடி காய்சின வேந்தன், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர், தேவர் பிரான், பெருங்குளம் மாயக்கூத்தர், தென்திருப்பேரை நிகரில் முகில் வண்ணன், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகியோர் ஒவ்வொருவராக ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருள்வர்.
அவர்களை மங்களாசாசனம் செய்து வரவேற்பதற்காக கொடி, குடை, ஆலவட்டம், பதாகைகள், திருச்சங்கு போன்றவைகளுடன் யானைகள் முன்வர, ஆழ்வார்திருநகரி கோயிலின் முன்புறம் உள்ள பூப்பந்தல் மண்டபத்திற்கு நம்மாழ்வார் எழுந்தருள்வார். ஒவ்வொரு பெருமாளும் வரும்போது அவர்களுக்குரிய திருவாய்மொழி பாடல் பாடப்படும். தீபாராதனையாகி அந்தப் பெருமாள் ஆழ்வார்திருநகரி கோயிலுக்குள் எழுந்தருள்வார்.
தொடர்ந்து 9 பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடைபெறும். இரவு 10 மணியளவில் ஒன்பது பெருமாள்களும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருள்வர். சுவாமி நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும், சுவாமி மதுரகவி ஆழ்வார் பரங்கி நாற்காலி வாகனத்திலும் உடன் எழுந்தருள்வர். ஒன்பது கருட சேவையைக் காண ஏராளமான பக்தர்கள் திரள்வர்.
ஜூன் 1-ம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி நம்மாழ்வார் எழுந்தருள, 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலத்தில் ஆழ்வார் அருள்பாலிப்பார். புகழ்பெற்ற வைகாசி விசாக தீர்த்தவாரி 2-ம் தேதி பகலில் தாமிரபரணி சங்கு படித்துறையில் நடைபெறுகிறது.