மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஐந்தாவது அவதாரம் நரசிம்ம அவதாரம். பக்தர்களாகிய பாகவதர்களின் பெருமையை எடுத்துக்கூறும் அவதாரம் இது. நரசிம்மர் அவதரித்த தலமாக கருதப்படுவது அஹோபிலம். நாடு முழுவதும் நரசிம்மருக்கு கோவில்கள் பல உள்ளன.
சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் என்ற நகரில், சிறிய மலைக் குன்றின் மீது பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் கொண்டுள்ளார்.
8-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் குடைவரைக் கோவிலாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. சிறிய குகையில் இருக்கும் கருவறையில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் உக்கிரத் தோற்றத்தில், வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டபடி அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. உற்சவர் - பிரஹலாத வரதர். தாயார் திருநாமம் அஹோபிலவல்லித் தாயார்.
மூலவர் நரசிம்மருக்கு நான்கு கைகள் உள்ளன. இரண்டு கைகளில் சங்கு, சக்கரங்களைத் தாங்கியுள்ளார். இன்னொரு வலது கை அபய முத்திரை காட்டியும், மற்றொரு இடது கை தனது மடியைத் தொட்டுக் கொண்பிக்கிறார். அஹோபிலவல்லி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். மூலவர் சன்னதிக்கு இடதுபுறம் ஆண்டாள் சன்னதி உள்ளது.
நரசிம்மர் உக்கிரத் தோற்றத்தில் வீற்றிருக்கும் சிங்கப் பெருமாள் கோவில் ஊருக்குள் யானைகள் அழைத்து வரப்பட்டால், அவை இரவு தங்குவதில்லை என்பது நடைமுறை.
இக்கோவிலில் 15 நாட்கள் வைகாசி பிரம்மோற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்குகிறது. அன்று மாலை சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலா வருகிறார். விழா நாட்களில் காலையும், மாலையும் வாகன பவனி நடைபெறுகிறது.
வரும் 25-ம் தேதி காலை சூரிய பிரபை, மாலையில் ஹம்ச வாகனம், 26-ம் தேதி காலை கருட சேவை, மாலையில் அனுமந்த வாகனத்தில் பெருமாள் புறப்பாடு கண்டருள்கிறார்.
மே 27-ம் தேதி காலை சேஷ வாகனம், மாலையில் சந்திரபிரபையில் வீதியுலா நடைபெறுகிறது. மே 30-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் கோவிலைச் சுற்றி வலம் வரும்போது வடபுறத்தில் சென்னை - செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக தேர் இழுத்துச் செல்லப்படும். அந்த சமயத்தில் வாகனப் போக்குவரத்தை மாற்றி விடுவார்கள். அந்தளவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஜூன் 1-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஜூன் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.