மயிலையில் இருந்து சென்று திருவல்லிக்கேணியில் எழுந்தருளும் ஆதிகேசவப் பெருமாள்!


மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

புராணங்களில் மயூரபுரி என அழைக்கப்படும் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் வனபோஜனம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. மயிலாப்பூரில் இருந்து பெருமாள் புறப்பாடாகி, திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்கிறார்.

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் தொன்மையனது. 108 திவ்யதேசங்களில் இடம்பெறாது; எனினும், 12 ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அவதரித்த தலம் என்ற சிறப்பு பெற்றது.

பேயாழ்வார் - மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

மூலஸ்தானத்தில் ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் மயூரவல்லித் தாயார் என்பதாகும். பேயாழ்வாருக்கு உபதேசம் செய்வதற்காக, தாயாரை மயூரபுரியில் அவதரிக்க பெருமாள் உத்தரவிட்டார். அதன்படி தாயார் ஆம்பல் மலரில் இருந்து ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் வெளிப்பட்டார். பின் பேயாழ்வாருக்கு மறை உபதேசம் அருளினார்.

மயூரவல்லித் தாயார் - மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில்

இத்தல தாயார், இரு கைகளில் அபய முத்திரை, வரத முத்திரைகளை தாங்கியும், மேலும் இரு கைகளில் தாமரைப் பூவை கொண்டும், பத்மாசனத்தில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார். ஆதிகேசவ பெருமாளுக்கு பங்குனி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் தீர்த்தவாரி நடைபெறும். தாயாருக்கு பிரதி வெள்ளிக்கிழமை வில்வ அர்ச்சனை, ஹோமம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர உற்சவம், நவராத்திரி உற்சவம், தை மாத லட்சார்ச்சனை போன்றவை முக்கிய விழாக்கள். ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் அவதரித்த பேயாழ்வாருக்கு, 10 நாட்கள் உற்சவ விழா நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் சுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது. ஆண்டாளுக்கு ஆடிப்பூரம், மார்கழி மாத உற்சவம், சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. தை அமாவாசையொட்டி தெப்ப உற்சவம் ஐந்து நாட்கள் நடக்கிறது.

மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் புறப்பாடு...

இக்கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் வனபோஜன உற்சவம் சிறப்பு வாய்ந்தது. மே 21-ம் தேதி நடைபெறும் இவ்விழாவில், அதிகாலை 5 மணிக்கெல்லாம் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பல்லக்கில் புறப்பாடாகி, வழிநடை உபயம் கண்டருளி, காலை 9 மணியளவில் திருவல்லிக்கேணி வானமாமலை மடத்துக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு திருவல்லிக்கேணி மாடவீதிகளில் புறப்பாடாகி, திருவீதி உலா வந்து, இரவு 9 மணிக்கு மடத்துக்கு வந்தருள்வார். இரவிலேயே அங்கிருந்து புறப்பட்டு மயிலாப்பூர் வந்தடைவார்.

இவ்விழாவில் பெருமாளுடன் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பங்கேற்பர். இவ்விழா தரிசிக்க விசேஷமாக இருக்கும்.

x