பெருமாளின் 11 கருட வாகன சேவையும்... ஈசனின் 12 ரிஷப வாகன சேவையும்..!


திருநாங்கூர் அஞ்சானாட்சி அம்பாள் சமேத மதங்கீஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் காட்சி

சீர்காழியைச் சுற்றிலும் 11 வைணவ திருத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றின் 11 பெருமாள்களும் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் திருமணிமாடக்கூடம் என்ற திருத்தலத்துக்கு எழுந்தருள்வர். அன்று இரவில் 11 பெருமாள்களும், 11 கருட வாகனங்களில் எழுந்தருளி சுவாமி திருமங்கையாழ்வாருக்கு காட்சி தருவது வழக்கம். இவ்விழா கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

இதுபோல் சீர்காழியைச் சுற்றிலும் உள்ள 12 சிவாலயங்களில் இருந்து 12 சுவாமிகள் ரிஷப வாகனங்களில் வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று எழுந்தருளி மதங்க மகரிஷிக்கு காட்சி தரும் வைபவம் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

திருநாங்கூர் 11 வைணவ திருத்தலங்கள்... 11 கருட வாகனங்கள்...

சீர்காழிக்கு அருகே அமைந்துள்ள திருநாங்கூர் அஞ்சானாட்சி அம்பாள் சமேத மதங்கீஸ்வர சுவாமி கோவில், திருக்காட்டுப்பள்ளி அகிலாண்டேஸ்வரி சமேத ஆரண்ய சுந்தரேஸ்வர சுவாமி கோவில், மங்கைமடம் யோகாம்பிகை சமேத யோகநாத சுவாமி கோவில், திருச்சொர்ணபுரம் (காத்திருப்பு) சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் சுவாமி கோவில், திருநாங்கூர் சந்திராட்சி அம்பாள் சமேத அமிர்தபுரீஸ்வர சுவாமி கோவில், அல்லிவிளாகம் நற்றுணை நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில், திருநாங்கூர் நம்பிற்பிரியாள் அம்பாள் சமேத நம்புவார்க்கன்பர் சுவாமி கோவில், திருநாங்கூர் காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோவில், திருநாங்கூர் திருமேனிக்கூடம் செளந்தரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமி கோவில், பெருந்தோட்டம் அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேஸ்வர சுவாமி கோவில், அன்னப்பன்பேட்டை சுந்தரநாயகி அம்பாள் சமேத கலிக்காமேஸ்வர சுவாமி கோவில், நயனிபுரம் நளினாம்பிகா சமேத நயனவரதேஸ்வர சுவாமி கோவில் ஆகிய 12 கோவில்களும் பாடல்பெற்றவை.

இவை 12 கோவில்களில் இருந்தும் அம்பாளும், சிவபெருமானும், திருநாங்கூர் அஞ்சானாட்சி அம்பாள் சமேத மதங்கீஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்து ரிஷப வாகனத்தில் காட்சி தருகின்றனர். இவ்விழா வரும் மே 19-ம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள், ஹோமங்களுடன் தொடங்குகிறது.

ரிஷபாரூடர்

வரும் 20-ம் தேதி காலை 11 மணிக்கு திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோவிலுக்கு, இந்த 12 கோவில்களில் இருந்தும் அம்பாளும், சுவாமியும் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து இக்கோவிலில் பஞ்சாட்சர ஜெபஹோமத்துடன், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பன்னிரு சிவபெருமான் - அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

இரவு 10 மணிக்கு பன்னிரு சிவபெருமான்களும், அம்பிகைகளும் தனித்தனி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, மதங்க மகரிஷிக்கு பன்னிரு ரிஷபாரூடராய் திருக்காட்சி அளிக்கின்றனர். தொடர்ந்து வீதியுலா வந்து, அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் கோவில் வந்தடைவர். அங்கு சமகாலத்தில் அனைத்து சுவாமிக்கும் தீபாராதனை நடைபெறும்.

x