ஆடி முளைக்கொட்டு உற்சவம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்


மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று ஆடி முளைக்கொட்டு உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இது அம்மனுக்கான திருவிழா என்பதால், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற ஆன்றோர் வாக்கின்படி ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு சாகுபடி பணிகளை மேற்கொள்வது பாரம்பரிய நிகழ்வாகும். அமோக விளைச்சல் பெற வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபடுவர். விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகிய 4 திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

அதன்படி ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மற்ற திருவிழாக்கள் எல்லாம் சுவாமி சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றி திருவிழாக்கள் நடைபெறும். இத்திருவிழா அம்மனுக்கான திருவிழா என்பதால் அம்மன் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதற்காக தங்கக் கொடி மரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க காலை 9.30 மணியளவில் 10 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

பின்னர் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் பி.கே.எம்.செல்லையா, டாக்டர் சீனிவாசன், மீனா, கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். தினமும் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.

நாதஸ்வரக் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்ப்பர். முக்கிய விழாவான ஏழாம் திருநாளன்று இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்நிதியில் அம்மன் சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். ஆக.14ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ச.கிருஷ்ணன், அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

x