தி.மலை - கோட்டுப்பாக்கம்: குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்!


கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமியின் 188-வது குருபூஜை விழாவில் குழந்தை வரம் வேண்டி குளக்கரையில் மண் சோறு சாப்பிட்ட பெண்கள்.

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமியின் 188-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த மக்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த கிராமத்துக்கு வந்த பரதேசி ஆறுமுக சுவாமிகள், வனப்பகுதியில் சேகரித்த மூலிகைகளை மருந்தாக்கி மக்களுக்கு கொடுத்து குணப்படுத்தி உள்ளார்.

இதனால் கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று, கோட்டுப்பாக்கம் கிராமத்திலேயே பரதேசி ஆறுமுக சுவாமிகள் தங்கி, ஆன்மிக சிந்தனைகளை ஏற்படுத்தி மக்களை பாதுகாத்து வந்துள்ளார். இவர், சித்தி பெற்றதும், அவருக்கு ஜீவ சமாதி எழுப்பப்பட்டது. சித்தி பெறுவதற்கு முன்பாக, ஆடி மாதம் அமாவாசையில் தனக்கு படையலிடப்படும் பிரசாதத்தை குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்படி, பரதேசி ஆறுமுக சுவாமிகளின் 188-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. சன்மார்க்க சங்க கொடியேற்றத்துடன் கடந்த 2-ம் தேதி குருபூஜை வழிபாடு தொடங்கியது. முற்றோதல் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றன.

கோட்டுப்பாக்கத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பரதேசி ஆறுமுக சுவாமிக்கு காவடி ஏந்தி வந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

பின்னர், படையலிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குழந்தை வரம் வேண்டி வரிசையில் காத்திருந்த பெண்கள், படையலை பெற்றுக் கொண்டு குளக்கரை படியில் வைத்து, மண்டியிட்டு, 2 கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டு, பரதேசி ஆறுமுக சுவாமியை வழிபட்டனர்.

குழந்தை வரம் வேண்டி கடந்தாண்டு மண்சோறு சாப்பிட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தையின் எடைக்கு எடை நாணயம், வெல்லம், சர்க்கரை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். குருபூஜை விழா ஏற்பாடுகளை கிராமமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

x