ராமானுஜருக்கு சேவைகள் செய்து, அவரது கையால் திருநாமம் சூட்டிக்கொண்ட பெருமாள்!


திருக்குறுங்குடி ஸ்ரீ அழகிய நம்பிராயர்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அமைந்திருக்கிறது. இங்கு பிரதான சன்னதியில் ஸ்ரீ அழகிய நம்பிராயர் எழுந்தருளி இருக்கிறார். தாயார்: குறுங்குடிவல்லி. இதுதவிர சயன நம்பி, அமர்ந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என மேலும் நான்கு சன்னதிகள் திருக்குறுங்குடியில் அமைந்துள்ளன. இங்கு ஓடும் நம்பியாறு திருப்பாற்கடலுக்கு சமமாகக் கருதப்படுகிறது.

திருக்குறுங்குடி பெருமாள் கோயில்

பகவத் ராமானுஜர் ஒருமுறை திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி சில காலம் தங்கி இருந்தார். அப்போது ராமானுஜரின் சீடர் வடுகநம்பியின் உருவத்தில் ஸ்ரீ அழகிய நம்பிராயர் வந்தார். ராமானுஜருக்கு செய்ய வேண்டிய தொண்டுகளை எம்பெருமானே சீடர் உருவத்தில் செய்தார். இதையறியாத ராமானுஜரும் தான் நெற்றியில் இட்ட திருநாமத்தின் மிச்சத்தை, எம்பெருமானின் திருநெற்றியில் சூட்டினார். இவ்வாறு ராமானுஜருக்கு சேவைகள் செய்து, அவரது கையால் திருநாமம் சூட்டிக்கொண்டதால் இந்த எம்பெருமானுக்கு ஸ்ரீவைஷ்ணவ நம்பி என்ற பெயர் ஏற்பட்டது.

திருக்குறுங்குடி பெருமாள் கோயில்

ஸ்ரீ ராமானுஜர் இங்கிருந்து புறப்படும் முன்பாக திருக்குறுங்குடி கோயில் காரியங்களையும், சம்பிரதாயப் பணிகளையும் மேற்கொள்ள, தனது ஆசார்யரான சுவாமி பெரிய நம்பியின் வம்சத்தில் உதித்த பூர்ணாசார்யர் என்ற சுவாமியைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு சந்நியாசம் செய்து வைத்து, பேரருளாள ராமாநுஜ ஜீயர் என்ற திருப்பெயரிட்டு, அவரை திருக்குறுங்குடி திருமடத்தின் முதலாவது ஜீயர் சுவாமியாக நியமித்தார். சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இவர் அவதரித்தார். இவ்விழா திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் சன்னதியில் இன்று (12.5.2023) கொண்டாடப்படுகிறது.

x