காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். வைணவ சம்பிரதாய வளர்ச்சிக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட பகவத் ராமானுஜர் அவதரித்த புண்ணிய தலம் இது.
பகவத் ராமானுஜர் இங்கிருந்து காஞ்சிபுரத்துக்கும், பின்னர் ஸ்ரீரங்கத்துக்கும் சென்று வைஷ்ணவ சம்பிராயத்தை வளர்த்தார். அப்போது தன்னைப்போல் பஞ்சலோக விக்ரகம் செய்து, அதனை அணைத்து தனது சக்தியை அதனுள் செலுத்தினார். அதற்கு தானுகந்த திருமேனி என்று பெயர். இந்த விக்ரகத்தை இப்போதும் ஸ்ரீபெரும்புதூரில் தரிசிக்கலாம்.
ராமானுஜர் அவதரித்த சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும் வகையில், ராமானுஜர் அவதார உற்சவம் 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு இவ்விழா கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தேர்த்திருவிழாவுடன் நிறைவுற்றது.
இதன் தொடர்ச்சியாக ஆதிகேசவ பெருமாளுக்கான 7 நாள் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 6-ம் தேதி கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாள் சேவை சாதித்தார். 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.