திண்டுக்கல்: முத்தழகுபட்டியில் உள்ள பிரசித்திபற்ற புனித செபஸ்தியார் ஆலய விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கியது.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகுபட்டியில் பிரசித்தி பெற்ற 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்கு நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு காலை புனித செபஸ்தியார் திருவுருவம் பொறித்த கொடி முத்தழகுபட்டியில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
கொடி மீண்டும் ஆலயத்தை அடைந்தவுடன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 60 அடி உயர கொடிக்கம்பத்தில் புனிதரின் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சமாதானத்தை போற்றும் வகையில் நூற்றுக்கணக்கான புறாக்களை பொதுமக்கள் வானில் பறக்கவிட்டனர். திண்டுக்கல் நகர், முத்தழகுபட்டி மற்றும் சுற்றுப்புற மக்கள் திரளாக கொடியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் திங்கள்கிழமை இரவு மின்தேர் பவனி நடைபெறவுள்ளது. செவ்வாய்கிழமை காலையில் காணிக்கை பவனி நடைபெறும். அன்று ஆலய விழாவில் நடைபெறும் அன்னதானத்திற்கு ஆடுகள், காய்கறிகள், அரிசி மூடைகள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவந்து வழங்குவர். இதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டு, மாலை 6 மணி முதல் விடிய விடிய அசைவ அன்னதானம் நடைபெறும்.
ஆகஸ்ட் 7, புதன்கிழமை பகல் 2 மணியளவில் தேர்பவனி நடைபெறும். இரவு சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவுபெறும். முத்தழகுபட்டி புனிதசெபஸ்தியார் ஆலய விழாவை முன்னிட்டு திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனிதசெபஸ்தியாரை வழிபடுவர்.