திருச்சித்திரக்கூடம் எனப்படும் சிதம்பரத்தில் நடராஜ பெருமான் சன்னதிக்கு அருகிலேயே, சயனக் கோலத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் எழுந்தருளி இருக்கிறார். 108 திவ்யதேசங்களில் இது 41-வது தலம். உற்சவர் திருநாமம் தில்லை தேவாதிதேவப் பெருமாள். தாயார் புண்டரீகவல்லித் தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.
கைலாயத்தில் ஒருமுறை சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் இடையே விளையாட்டாக நடனப்போட்டி தொடங்கியது. இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆடினர். ஒருகட்டத்தில் இப்போட்டி தீர்ப்பு சொல்ல முடியாததாக மாறியது. எவராலும் தீர்ப்பு சொல்ல முடியாத நிலையில், மகாவிஷ்ணுவை நாடினர்.
தேவசிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு தில்லை மரங்கள் சூழ்ந்த வனத்தின் நடுவே சித்திர சபை ஒன்றைக் கட்டச் செய்தார் மகாவிஷ்ணு. அங்கு போட்டி ஆரம்பமானது. சிவபெருமானின் அத்தனை தாண்டவ நடனங்களுக்கும் ஈடாக பார்வதி தேவியும் நடனமாடினார். இப்போட்டி மிகத் தீவிரமாக மாறியது. சிவபெருமான் ஒரு காலை விண்ணை நோக்கி உயர்த்தி ஊர்த்துவ புண்டக நடனத்தை ஆடி நிறுத்த, பெண்ணாகிய பார்வதிதேவியால் அவ்வாறு ஆட முடியாமல் போனது. எனவே, நடனப் போட்டியில் சிவபெருமானே வெற்றி பெற்றதாக முடிவானது.
இந்த வைபவம் நடந்த இடமே தில்லை வனமாக இருந்த சிதம்பரம். இங்கே சித்திரசபையில் நடனக்கோலத்தில் நடராஜ பெருமான் வீற்றிருக்கிறார். அன்னை சிவகாமி தனி சன்னதியில் கொலு வீற்றிருக்கிறார். இதே தலத்தில் மகாவிஷ்ணுவும் கோவிந்தராஜ பெருமாளாக எழுந்தருளி இருக்கிறார்.
கோவிந்தராஜப் பெருமாளுக்கு சித்திரை மாதத்தில் 10 நாட்கள் வசந்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். தற்போது நடந்து கொண்டிருக்கும் இவ்விழாவில் சித்திரை பெளர்ணமி நாளான நேற்று கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடாகி, கஜேந்திர ஆழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. வரும் 10-ம் தேதி வரை பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.