காக்கும் கார்த்திகைச் செல்வன் - 23


சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப் பெருமானின் கோயில்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது. நினைத்த காரியம் நடந்தேற, சொந்த வீடு அமைய பக்தர்கள் இங்கு வந்திருந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கி.மீ பயணித்த பின்னர், இடதுபுறமாக உள்ள வயல்களைக் கடந்து 3 கி.மீ சென்றால் சிறுவாபுரியை அடையலாம். சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசேலபுரி என்று அழைக்கப்படும் இவ்வூருக்கு சென்னையில் இருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் செல்லலாம். ராமாயண காலத்தில் ராமபிரானுக்கும் லவ குசனுக்கும் போர் நடந்த இடமாக இவ்விடம் கருதப்படுகிறது.

தல வரலாறு

இலங்கையில் ராவணனை வீழ்த்திய ராமபிரான், வெற்றிக் களிப்புடன் அயோத்தி திரும்பி, பட்டாபிஷேகம் கண்டருளினார். அச்சம்பவத்துக்குப் பிறகு அவரது கர்ப்பிணி மனைவி சீதா பிராட்டி மீது ஊரார் பழி சுமத்தினர். இதில் மிகவும் வருத்தமடைந்த ராமபிரான், அவரை காட்டுக்கு அனுப்பி வைத்தார். காட்டில் வால்மீகி ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த சீதா பிராட்டிக்கு லவன், குசன் ஆகிய ஆண் குழந்தைகள் பிறந்து வளர்ந்து வந்தனர்.

மற்றொரு சமயம் அசுவமேத யாகம் செய்ய ராமபிரான் எண்ணினார். இதற்காக யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட, அது வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் வந்து நின்றது. குதிரையைக் கண்ட லவனும் குசனும், அதை கட்டிப் போட்டனர். இதை அறிந்து குதிரையை மீட்டுச் செல்ல வந்த ஆஞ்சநேயரை லவகுசர்கள் கட்டிப் போட்டனர். பின்னர் வந்த லட்சுமணரால் சிறுவர்களை வீழ்த்த இயலவில்லை. அவரையும் லவகுசர்கள் கட்டிப் போட்டனர்.

பிறகு ராமபிரானே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட்டார். இவ்வாறு சிறுவர்கள் இருவரும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த வரலாற்றுச் செய்தியை திருப்புகழ் மூலம் அறிய முடிகிறது. ‘சிறுவராகி இருவர் கரிபதாகி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதான நகர்’ என்ற திருப்புகழ் இந்தச் செய்தியை விரிவாக பதிவு செய்துள்ளது.

பிரம்மதேவரை தண்டித்து அவரது படைப்புத் தொழிலை ஏற்றுக்கொண்ட இத்தல முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வித்தைகளையும் கற்று பேரறிஞர் ஆகலாம் என்று திருப்புகழ் மேலும் கூறுகிறது. இவரை வழிபட்டால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ராமாயண காலத்தில் குசேலபுரியாக இருந்த இந்த இடமே தற்போது சிறுவாபுரியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திரன் மற்றும் தேவர்களுக்கு அமுது அளித்து வீடுபேறு கிடைக்க முருகப் பெருமான் அருள்பாலித்த இடமாகவும் சிறுவாபுரி விளங்குகிறது. பத்மாசூரனை வீழ்த்தி வதம் செய்த முருகப் பெருமான் வெற்றிக் களிப்புடன் அங்கிருந்து புறப்பட்டார். வரும்வழியில் தங்கி இளைப்பாறிய இடமாக சிறுவாபுரி விளங்குகிறது. அப்படி தங்கியபோது இந்திரன் முதலான தேவர்களுக்கு அமுது அளித்துள்ளார். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முருகப் பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயரில் இதே இடத்தில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்

சிறுவர் + அம்பு + ஏடு என்பது சின்னம்பேடு என்று ஆனது. அம்பு வைக்கும் கூடு, பேடு என்று அழைக்கப்படும். இத்தலத்தில் முருகம்மையார் என்பவர் வாழ்ந்து வந்தார். எப்போதும் அவர் முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். அவர் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையைத் துண்டித்தார். முருக சிந்தனையில் இருந்த அம்மையார் இதை உணரவில்லை. உடனே முருகப் பெருமான் அம்மையாருக்கு காட்சி அருளினார். இதனால் அவரது கை பழையபடி மீண்டும் ஒன்று சேர்ந்தது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

சிறுவாபுரியின் நுழைவாயிலில் சப்த மாதர் கோயில் நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோயில், மேற்கே பெருமாள் கோயில், அதற்குப் பின்னால் விஷ்ணு துர்கை கோயில் உள்ளன. வடக்கு வாயுமூலையில் பாலசுப்பிரமணிய பெருமான் கம்பீரமாக காட்சியருள்கிறார்.

கோயிலில் உள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணியர், ஆதிமூலவர், நவக்கிரகம் தவிர அனைத்து விக்கிரகங்களும் பச்சைக்கல்லால் (மரகதம்) ஆனவை. கோயிலின் முன்பகுதியில் உயரமான கொடிமரம் உள்ளது. இதன் அருகே உள்ள பச்சை மரகத மயிலின் அழகை வர்ணிக்காத புலவர்களே இருக்கமாட்டார்கள்.

நான்கரை உயரத்தில், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிறுவாபுரி முருகப் பெருமானின் முன்வலக்கரம் பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறது. பின் வலக்கரம் ஜெபமாலை ஏந்தியும், முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலம் தாங்கியும் உள்ளன.

மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முருகப் பெருமானை வேறு எங்கும் காண இயலாது. திருமணத் தடை நீங்க, புதிய வீடு அமைய, குழந்தைப் பேறு கிட்ட, கடன் தொல்லைகள் நீங்க சிறுவாபுரி சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

கோயிலின் உள்ளே கம்பீர ராஜ கணபதி, அருணாசலேஸ்வரர், அபீதகுஜாம்பாள், சூரியனார், சண்டிகேஸ்வரர், நாகர், ஆதிமூலர், நவக்கிரகங்கள், பைரவர், அருணகிரிநாதர், மயூரநாதர் ஆகியோருக்கு தனிச்சந்நிதிகள் உள்ளன. ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் குறிப்பிடத்தக்கது.

திருப்புகழ் போற்றும் சிறுவாபுரி

அருணகிரியார் பாடிய திருப்புகழ் சிறுவாபுரியைப் பற்றி சிறப்பித்துப் பாடியுள்ளது.

‘அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மமிழ்மீற – வருளாலே

அந்தர்யோ டுடனாடு சங்கரனு மகிழ்கூற

ஐங்கரனு முமையாளு – மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு

மஞ்சினனு மயனாரு – மெதிர்காண

மங்கையுடன் அரிதானு மின்பமுற மகிழ்கூற

மைந்துமயி லுடனாடி – வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள

புந்திநிறை யறிவாள – உயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு

பொன்பரவு கதிர்வீசு – வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப

தண்டமிழின் மிகுநேய – முருகேசா

சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான

தண்சிறுவை தனில்மேவு – பெருமாளே’

தேவேந்திரனை மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச் செய்து, நெருங்கி வந்த அசுரர்களின் உருவை மாற்றி அவர்களை மடியச் செய்து, தேவர்களின் மனம் மகிழும்படி அருள்பாலித்து, காளியுடன் நடனம் புரியும் சிவபெருமான், விநாயகர், உமாதேவி, பூமியில் உள்ளோர், முனிவர்கள், எட்டுத்திசையில் உள்ளோர் மகிழும்படியாக இந்திரனும் பிரம்மதேவரும் எதிரே நின்று கண்டு களிக்க, லட்சுமிதேவியும் திருமாலும் தங்கள் மகிழ்ச்சியை இன்பமாகக் கூற, வலிமையான மயிலுடன் நீ ஆடி வரவேண்டும்.

தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞானியே, உயர்ந்த புயங்களை (கையின் மேற்பகுதி) உடையவனே, பொங்கிய கடலுடன் கிரவுஞ்ச மலையையும், பிளவுபடச் செய்து, ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே, குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே, செம்பொன்னின் அழகு நிறைந்த உருவம் கொண்டவனே, தூய தமிழின்மீது மிகுந்த பற்று கொண்ட முருகேசப் பெருமானே, எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட குளிர்ந்த சிறுவைத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே ...

- என்று பலவாறு முருகப் பெருமானைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

பக்தர்கள் செவ்வாய்க்கிழமைகள், சஷ்டி, கார்த்திகை தினங்களில் சிறுவாபுரி பதிகத்தைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

‘மானோடு நீ கூடி மரகத மயிலோடு மன்னனே விளைவாகினாய், மதியோடு வளம் கூட்டி மன்றத்தில் நிலையான மகிமைக்கு அருளாகினாய், வானோரில் புகழ்பாடி வையத்தில் வாழ்வோரின் வாழ்க்கைக்குத் துணையாகினாய், தேனேன்ன தெளிவென்று தெரியாத பேருக்கும் தெளிவாக்கி நீ காட்டினாய்’

- என்று பக்தர்கள் உளம் உருக முருகப் பெருமானை பிரார்த்தனை செய்கின்றனர்.

திருவிழாக்கள்

திருக்கார்த்திகை, தைப்பூசம், நவராத்திரி, பங்குனி உத்திர விழா ஆகியன இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, விசாகம், பூச நட்சத்திர தினங்கள், சஷ்டி தினங்கள், அமாவாசை, பௌர்ணமி, ஆங்கில, தமிழ் புத்தாண்டு தினங்கள், பொங்கல், தீபாவளி நாட்களில் முருகப் பெருமானுக்கு இங்கே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. பூச நட்சத்திர தினத்தில் முருகப் பெருமானை வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வள்ளி – முருகப் பெருமான் பூச நட்சத்திர தினத்தில் நடைபெற்றதால், இந்த நட்சத்திரத்துக்கு கூடுதல் சிறப்பு. திருத்தணி முருகப் பெருமானுக்கும் பூச நட்சத்திர தினத்தில் வள்ளியுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, பால்குடம், காவடி சுமந்து வழிபாடுகள் செய்கின்றனர். தலவிருட்சமான மகிழ மரத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

இத்தல முருகப் பெருமானுக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) நெல்லிமுள்ளி பொடி கொண்டு அபிஷேகம் செய்து வந்தால் தீராத நோயில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. இத்தல மூலவரை செவ்வாய்தோறும் தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபாடு செய்து வந்தால் திருமணத்தடைகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். இத்தல முருகப் பெருமானை ஆறு முறை வலம் வந்தால் மாற்றங்கள் நிறைந்த இன்ப வாழ்வு உண்டாகும் என்பதும் ஐதீகம்.

x