ஆடி அமாவாசை | வீரராகவபெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் பக்தர்கள் தர்ப்பணம் @ திருவள்ளூர்


திருவள்ளூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக்குளக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவபெருமாள் கோயில், அஹோபில மடத்தின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு, தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசைக்கு முதல்நாள் இரவே வந்து தங்கி, அமாவாசையன்று கோயில் தெப்பக்குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, வீரராகவபெருமாளை வழிப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, சனிக்கிழமை இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா மாநில பகுதிகளில் இருந்தும் வீரராகவ பெருமாள் கோலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் வளாகம் மற்றும் தெப்பக்குளக்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்தனர்.

தொடர்ந்து, பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் நீராடி, குளக்கரையில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பிறகு, வீரராகவபெருமாள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

x